PUBLISHED ON : ஜூலை 26, 2026 12:36 AM

பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'தி.மு.க., ஆட்சியில் பஸ், 'பர்மிட்' வாங்க, ஐந்து லட்சம் ருபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும்; தற்போது, அப்படி கொடுக்க தேவை இல்லை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று ஒத்துழைப்பு வழங்கினால், 500 பேருந்துகளை ஆண்டு முழுதும் அரசு பேருந்துகளின் கட்டணத்தில் இயக்க தயார்' என்று, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெவித்துள்ளது.
பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். ஆனந்தமாக இருக்க வேண்டிய அந்த பயணம், ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையால், பொருமியபடி செல்லும் பயணமாக மாறிவிடுகிறது.
இது தொடர்பாக எவ்வளவோ செய்திகள் வந்த போதும், காதுகேளாதோர் காதில் ஊதிய சங்காய், முந்தைய ஆட்சியாளர்கள் அதை கண்டுகொள்ளவே இல்லை.
காரணம், லஞ்சம் வாங்கிக் கொண்டு, இக்கட்டண கொள்ளைக்கு துணை போய் உள்ளனர்!
சரி... த.வெ.க., ஆட்சியில் தான் லஞ்சம் கொடுக்க தேவையில்லையே... இனிமேலாவது நியாயமான கட்டணத்தில் பேருந்துகளை இயக்குவர் என்று எதிர்பார்த்தால், 'எங்கள் கோரிக்கைகளை ஏற்று அரசு ஒத்துழைப்பு வழங்கினால், 500 பேருந்துகளை அரசு பேருந்துகளின் கட்டணத்தில் இயக்க தயார்' என்று கூறியுள்ளனர்.
தமிழகத்தில் கிட்டத்தட்ட, 2,400 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில், 500 பேருந்துகளை மட்டும் அரசு பேருந்துகளின் கட்டணத்தில் இயக்கினால், மீதமுள்ள பேருந்துகளில் வழக்கம் போல் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவோம் என்று சொல்லாமல் சொல்கின்றனரா?
ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது போல், மக்களின் தேவையை பயன்படுத்தி, கொள்ளை அடித்தவர்களால், நியாயமாக செயல்பட முடியாது போலும்!
ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளைக்கு, த.வெ.க., அரசாவது முடிவு கட்ட வேண்டும்!
அன்னிய சக்திக்கு துணை போகாதீர் இளைஞர்களே!
கு.காந்தி ராஜா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
பொது தேர்வுகளின்போது வினாத்தாள் கசிவது, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மன உளைச்சலை கொடுக்கும் என்பது உண்மைதான்!
ஆனால் தேர்வுகள் நடத்தும் இடத்தில், பணவெறி பிடித்த சிலரால், அரசு செய்யும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி, இதுபோன்ற காரியங்கள் நடைபெறுகின்றன.
அதேநேரம், வினாத்தாள் கசிவு என்பது இதுதான் முதல் முறை அல்ல; பல்வேறு காலகட்டங்களிலும் பல்வேறு நாடுகளிலும் நடந்திருக்கின்றன
கடந்த 20 ஆண்டுகளில் நம் நாட்டில் நிகழ்ந்த பெரிய அளவிலான வினாத்தாள் கசிவுகளில், கிட்டத்தட்ட 14 சம்பவங்கள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்துள்ளன.
கடந்த 2006ல் காங்., ஆட்சியில், டில்லியில், சி.பி.எஸ்.இ., - பிளஸ ் டூ கணக்குப்பதிவியல் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது. அதைத் தொடர்ந்து, 2007ல் நாடு முழுதும் நடந்த அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்விலும் வினாத்தாள் கசிந்தது.
அதேபோன்று, 2012ல் எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரி நுழைவுத் தேர்வு வினாத்தாள் டில்லியில் கசிந்தது.
ஏன்... கடந்த தி.மு.க., ஆட்சியில், தமிழக அரசு நடத்திய, டி.என்.பி.சி., தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரமும் நடந்தது தானே!
வினாத்தாள் கசிவு இந்தியாவில் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளிலும் நிகழ்ந்துள்ளன.
சில மாதங்களுக்கு முன், பிரிட்டன் கேம்பிரிட்ஜ் சர்வதேச கல்வி வாரியம் நடத்திய உயர் துணை நிலை மற்றும் உயர் நிலை தேர்வுகளின் போது இணையத்தில் வினாத்தாள் கசிந்தது.
அதேபோன்று, அமெரிக்க பல்கலைகளில் சேருவதற்காக உலகம் முழுதும் நடத்தப்படும், 'சேட்' எனப்படும் புலமை சார் மதிப்பீட்டு தேர்வு மற்றும் ஜி.ஆர்.இ., எனப்படும் பட்டதாரி பதிவு தேர்வுகளில் வினாத்தாள் கசிவுப் புகார்கள் எழுந்தன.
வினாத்தாள் கசிவு என்பது தடுக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
மத்திய அரசும், வினாத்தாள் கசிவதை தடுக்க, அடுத்த ஆண்டிலிருந்து, 'ஆன்லைன்' வாயிலாக, 'நீட்' தேர்வுகள் நடக்கும் என அறிவித்துள்ள நிலையில், அதை மனதில் கொள்ளாமல், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக, பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடக்கும்போது, அத்துமீறி உள்ளே நுழைய முற்பட்டதும், வன்முறையில் ஈடுபட்டதும் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல!
இதன் பின்னணியில் இருக்கும் அன்னிய சக்திகள் குறித்து, அரசு விசாரணை நடத்த வேண்டும்; அதேநேரம், நாட்டின் இறையாண்மையை சீர்குலைக்க நினைக்கும் அன்னிய சக்திகளுக்கு துணை போகவோ, வினாத்தாள் கசிவை வைத்து, அரசியல் லாபம் காண துடிப்போரின் அதிகார பசிக்கோ இளைஞர்கள் இரையாகி விடக் கூடாது!
தொகுதி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!
முனைவர் செ.அ. ராகுல் கோல்டன், உதவிப் பேராசிரியர், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துார், ஒரு சாதாரண சட்டசபை தொகுதி மட்டும் அல்ல; ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் ஆன்மிகத் தலம்.
திருச்செந்துாருக்கு இன்று மிகப்பெரிய சவாலாக இருப்பது போக்குவரத்து நெரிசல். கோவில் திருவிழாக்கள், கந்த சஷ்டி, வைகாசி விசாகம் போன்ற காலங்களில், பல லட்சம் பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.
ஆனால், நகருக்குள் நுழையும் சாலைகளோ மிக குறுகலாக உள்ளன. மாற்றுச் சாலைகளும் போதுமான அளவில் இல்லை; வாகன நிறுத்துமிடங்களும் குறைவாக உள்ளன.
இதன்காரணமாக, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதுமட்டுமல்ல... திருச்செந்துாரில் சாக்கடை மற்றும் கழிவுநீர் பிரச்னையும் தீராத தலைவலியாக இருக்கிறது.
ஒரு சர்வதேச ஆன்மிக சுற்றுலா மையமாக இருக்கும் இந்நகரம், அடிப்படையான சுகாதார வசதிகள் கூட இல்லாமல் உள்ளது.
அதேபோல், திருச்செந்துார் ரயில் பாதை தொடர்பான நீண்ட நாள் கோரிக்கையும் முழுமையாக நிறைவேறவில்லை.
இதற்காக, இத்தொகுதி அரசியல்வாதிகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதை விடுத்து, தொலைக்காட்சிகளில் அரசியல் அக்கப்போர் செய்து கொண்டு இருக்கினறனர்.
ஒரு தொகுதியின் வளர்ச்சியை, அரசியல் விமர்சன பேச்சுகளை வைத்து, மக்கள் மதிப்பீடு செய்வதில்லை; நிறைவேற்றப்பட்ட திட்டங்களால் மட்டுமே அத்தொகுதியின் எம்.எல்.ஏ.,க்கள் மக்கள் மனதில் நிலைத்து நிற்பர்!
எனவே, இத்தொகுதியின் அரசியல் கட்சியினர், ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி விமர்சனம் செய்வதை விடுத்து, நகருக்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைத்து தருவதில் கவனத்தை செலுத்த வேண்டும்!
