PUBLISHED ON : மார் 04, 2024 12:00 AM

வை.சந்திரசேகரன், ஓய்வூதியர் நல சங்கத்தின் கடலுார் மாவட்ட செயலர், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், கடந்த 1972ல் அன்றைய முதல்வர் கருணாநிதியால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் துவங்கப்பட்டது. அன்று முதல் ஆலமரமாக வளர்ச்சி அடைந்து பொதுவினியோக திட்டமாக விரிவடைந்து, சமூகத்தில் நலிவுற்ற ஏழைகள், விதவைகள், ஆதரவற்றோர், முதியோர் போன்றோருக்கு பல நல திட்டங்களை, வருவாய் துறையின் ஆணைக்கேற்ப செயல்படுத்தி வருகிறது.
எம்.ஜி.ஆர்., துவங்கிய சத்துணவு திட்டம், குழந்தைகளுக்கான அங்கன்வாடிகள், கருவுற்ற தாய்மார்கள் நல திட்டங்கள், அரசு சார்ந்த மாணவ - மாணவியர் விடுதிகள், அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை போன்றவற்றை வழங்கும் பணிகளை செய்து வருகிறது.
மேலும், அரசின் கொள்முதல் நெல்லை நவீன அரிசி ஆலைகள் வாயிலாக அரைத்து, மாவட்டங்களுக்கு அனுப்பி பொது வினியோக திட்டம் வாயிலாக ரேஷன் கடைகளில் வழங்குவது உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபடுகிறது.
இந்த நுகர்பொருள் வாணிப கழகத்தில், 30 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 10,000 சிவில் சப்ளை ஊழியர்கள், மத்திய அரசின், இ.பி.எப்., பென்ஷன் திட்டத்தில் சொற்ப பென்ஷனையே வாங்கி வருகின்றனர்.
இதனால், வாழ்வாதாரம் இன்றி, வயது முதிர்ந்த பலரும், குடும்பத்தில் இளைய தலைமுறையை சார்ந்து, சுய கவுரவத்தை இழந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கும், அரசின் இதர பொதுத்துறை நிறுவன ஓய்வூதியர்களுக்கு வழங்கும் மாதாந்திர கருணை தொகை போல வழங்கினால், வாழ்வின் இறுதிக்காலத்தில் வறுமையில் வாடும் பலருக்கும் உதவியாக இருக்கும்.
எனவே, விலைவாசி அடிப்படையில் மாதந்தோறும் கருணை தொகையாக, குறிப்பிட்ட தொகையை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான ஓய்வூதியர்களின் பல கோரிக்கை மனுக்கள், எங்களுக்கான துறை அலுவலக அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்டு, தலைமை செயலகத்தில் நிலுவையில் இருக்கின்றன.
இவற்றின் மீது, முதல்வர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி, எங்கள் துயர் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓட்டு போட்ட பாவத்துக்கு பரிகாரம்!
குரு பங்கஜி, சென்னையில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நீங்கள் பா.ஜ.,வில் சேர்ந்து
விடுவீர்கள் என சொல்கின்றனரே' என்று கேட்ட செய்தியாளரை பார்த்து, 'அப்படி
சொன்னவனை, செருப்பால் அடிப்பேன்' என, ஆவேசமாக பதில் கூறியிருக்கிறார்,
காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர். மேலும், ஊடகத்தினர் பிழைத்துப்
போகட்டும் என்று தான் பேட்டி கொடுப்பதாகவும், மார்தட்டி இருக்கிறார்
திருநாவுக்கரசர்.
பொறுப்பான எம்.பி., பதவியில் இருக்கும் ஒரு மூத்த
தலைவரே, இப்படி ஆணவத்துடன், அகம்பாவமாக பேட்டியளிப்பதை பார்த்து, நம்
அரசியல் இப்படி தரம் தாழ்ந்து போய் விட்டதே என்ற வருத்தம் தான்
ஏற்படுகிறது. இந்த சம்பவத்தில் இருந்து ஒரு உண்மை, தெள்ளத் தெளிவாக
விளங்குகிறது.
அது என்னவென்றால், நாகரிகம், சொல்நயம், பணிவு,
மனிதநேயம் போன்ற பண்புகள், அறவே அற்றுப் போனவர்களை தேர்தலில் ஓட்டு போட்டு,
எம்.பி., போன்ற பொறுப்பான பதவிகளில் அமர்த்தியுள்ள மக்கள் தான், தங்களை
நொந்து கொள்ள வேண்டும்.
இன்னும் சொல்ல போனால், இவர்களை டில்லிக்கு அனுப்பி வைத்த பாவத்திற்கு, கோவிலில் சென்று கடவுளிடம் பாவமன்னிப்பு கேட்க வேண்டும்.
அத்துடன்,
'கடவுளே... இனி இதுபோன்ற மனிதர்களை எம்.பி., - எம்.எல்.ஏ.,வாக தேர்வு
செய்து அனுப்ப மாட்டோம்' எனவும் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
இதுதான் மக்கள் செய்த பாவத்திற்கு பரிகாரமாக அமையும்.
பிரதமர் மோடியின் நம்பிக்கை பொய்க்காது!
ரா.சேது ராமானுஜம், செல்லுார், மதுரை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: பார்லிமென்டில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு பிரதமர் மோடி பதில்அளித்து, கீழ்கண்டவாறு பேசினார்...
'நாங்கள் முதல் முறை ஆட்சி அமைத்தபோது, முந்தைய அரசுகள் விட்டுச்சென்ற கழிவுகள், இடிபாடுகளை அகற்றி சரி செய்தோம். இரண்டாவது ஆட்சியின்போது, அடுத்த பல்லாண்டுகளுக்கான அஸ்திவாரத்தை அமைத்தோம். மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்போது, இந்தியாவை உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாற்றுவோம் என்பது இந்த மோடியின் கேரன்டி' என்றார்.
அவர் கூறியதை போல, ஒவ்வொரு முறை மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைக்கும்போதும், மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்களான, துாய்மை இந்தியா, 'மேக் இன்' இந்தியா, இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டங்கள், 'ஸ்மார்ட்' சிட்டி, ஏராளமான பாலங்கள், நெடுஞ்சாலை திட்டங்களை கொண்டு வந்துள்ளனர்...
ரயில் போக்குவரத்து கட்டமைப்புகளை உயர்த்தி, ரயில்வே ஸ்டேஷன்களை தரம் உயர்த்தி, 'வந்தே பாரத்' ரயில்களை அறிமுகம் செய்துள்ளனர். விமான நிலையங்களை வெளிநாடுகளுக்கு இணையாக தரம் உயர்த்தியுள்ளதுடன், புதிய விமான நிலையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன...
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதுடன், விவசாயிகளுக்கு, 6,000 ரூபாய் உதவித்தொகை திட்டம், ஏழை பெண்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் வாயிலாக இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன...
மெட்ரோ ரயில் சேவைகள், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கள்ள நோட்டு புழக்கத்தை ஒழித்திருப்பது, ஹிந்துக்களின் 500 ஆண்டு கனவான ராமர் கோவிலை கட்டி, திறந்து, உ.பி.,யை ஒரு ஆன்மிக வழிபாட்டு தலமாக மாற்றியுள்ளனர்...
ராமர் கோவிலை திறந்த ஒரு மாதத்தில், 25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்த கோவில் வாயிலாகவே, உ.பி., அரசுக்கு அடுத்த ஆண்டு முதல், 25,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது...
மேலும், பயங்கரவாதிகள் பிடியில் சிக்கியிருந்த காஷ்மீரை மீட்டெடுத்தது; ஊழல் அரசியல்வாதிகளை கைது செய்து, 'உள்ளே' தள்ளுவது, என மோடி அரசின் சாதனைகளை அடுக்கிக் கொண்ட போகலாம்.
முதல் ஐந்து ஆண்டுகளிலேயே மோடியின் ஆட்சியைப் புரிந்து கொண்ட வட மாநிலத்தவர்கள், இரண்டாவது முறையாக அபரிமிதமாக கூடுதல் லோக்சபா சீட்களை பா.ஜ.,வுக்கு பரிசளித்தனர். இது, மூன்றாவது முறை இன்னமும் கூடும் என்பது பிரதமரின் அபார நம்பிக்கை; அவரது நம்பிக்கை பொய்க்காது.

