PUBLISHED ON : ஜூன் 12, 2025 12:00 AM

வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் தங்கி படித்து வந்த, 13 வயது சிறுமி, அங்கு பணிபுரியும் காவலாளியால் பாலியல் வன்முறைக்கு ஆளானது கேட்டு மனம் துடித்துப் போனது.
சமீபகாலமாக, தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுதுமே பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு காரணம், குற்றவாளிகளை தண்டிக்க நம் நாட்டில் கடுமையான சட்டங்கள் இல்லாததே!
அரபு நாடுகளில் பாலியல் குற்றம் செய்தாலோ, போதைப் பொருள் வைத்திருந்து பிடிபட்டாலோ உடனடியாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
அதுபோன்று கடுமையான தண்டனைகள்இங்கு இல்லாததே குற்றங்கள் பெருக காரணம்.
ஜாமின் வழங்கும் முறைகளும், அடுத்தடுத்து தொடரப்படும் மேல் முறையீடு வசதிகளும் குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைகின்றன.
அரசியல் பின்புலமும், செல்வாக்கும் உள்ள குற்றவாளிகளுக்கு சிறையில் சகல வசதிகளும் செய்து தரப்படுகின்றன.
முன்பெல்லாம் கொலை, பாலியல் பலாத்காரம் மற்றும் தேச விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுங்காவல் தண்டனை வழங்கப்படும்.
இக்குற்றவாளிகளுக்கு மரம் அறுத்தல், மூட்டை துாக்குதல், சரக்கு வாகனங்களில் லோடு ஏற்றுதல் - இறக்குதல் போன்ற கடுமையான வேலைகளும், வெறும் கூழும், கஞ்சியும் மட்டுமே உணவாக சிறையில் தரப்பட்டன.
குறைவாக சாப்பிட்டு, கடினமான வேலைகளை செய்யவேண்டும். வேலை செய்ய மறுத்தால் அடி கிடைக்கும்.
ஆனால், மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட பின், 'இதுபோன்ற கடினமான வேலைகளை குற்றவாளிகளுக்கு தரக்கூடாது' என்று போர்க் கொடி துாக்கியது.
அத்துடன், குற்றவாளிகளை மனிதாபிமான முறையில் நடத்த வேண்டும் என்றது.
இதன்காரணமாக, எத்தகைய கொடூர குற்றவாளிக்கும் கடினமான வேலைகள் தரப்படுவதில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கஞ்சி, கூழுக்கு பதில் சோறும், பிரியாணியும் வழங்கப்படுகின்றன.
செல்வாக்குள்ள குற்றவாளிகளுக்கு வீட்டு உணவும், ஹோட்டல் உணவும் வரவழைத்து கொடுப்படுகின்றன. நாளடைவில் சிறைக்குள் கஞ்சா, மது, சிகரெட் என, எல்லாம் புழக்கத்திற்கு வரத் துவங்கின.
சமீபத்தில் சிறைக் குற்றவாளிகள் சிலர், நட்சத்திர விடுதியில் தங்கி உல்லாசமாக இருந்து விட்டுப் போனதையும், சிறைக் காவலர் உதவியோடு, சிறைக்குள் விபசாரம் நடைபெற்றதையும் செய்தித்தாள்களில் படிக்க முடிந்தது.
ஆக, நம் நாட்டில் சிறைச்சாலைகள் உல்லாச விடுதி போல் ஆகி விட்டன. எதிரிகள் பயமின்றி, சிறையில் பாதுகாப்பாக இருக்கலாம்.
எனவே, சிறை செல்ல எவரும் அஞ்சுவதில்லை. இப்படிப்பட்ட நிலையில் குற்றங்கள் பெருகாமல் என்ன செய்யும்?
சட்டங்களை கடுமையாக்காத வரையில், குற்றங்கள் பெருகுவதை எந்த அரசாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே நிதர்சனம்!
சி.பி.ஐ., விசாரணை தேவை!
கோ.பாண்டியன்,
செங்கல் பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கோவையில் நடந்த
குவாரி மோசடியில், கள அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரையிலான தொடர்பு
குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை
எடுக்க, சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்
துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதற்காக தான், அதை காவல் துறையின்
கீழ் கொண்டு வராமல், தனி இயக்கமாக செயல்படுகிறது. ஆனாலும், ஆட்சியாளர்கள்
ஆட்டுவித்தலுக்கு ஏற்ப ஆடும் பொம்மையாகத் தான், லஞ்ச ஒழிப்புத் துறை
செயல்படுகிறது.
லஞ்ச ஒழிப்புத் துறையை பயன்படுத்தி, தி.மு.க., -
அ.தி.மு.க., என, இரு கட்சிகளும் தாங்கள் அதிகாரத்தில் இருக்கும் போது,
எதிர்க்கட்சியினர் மீது வழக்கு தொடுத்து, தங்கள் வஞ்சத்தை தீர்த்துக்
கொள்கின்றன.
கடந்த காலத்தில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள்
பலர் மீது, தி.மு.க.,வினர் சொத்து குவிப்பு வழக்கு போட்டனர். அதில்,
முன்னாள் அமைச்சர் கே.பொன்னுசாமி மீதான ஒரேயொரு வழக்கில் தான், லஞ்ச
ஒழிப்புத் துறையால் தண்டனை பெற்றுத் தர முடிந்தது.
அதனால்தான்,
ஜெயலலிதா மற்றும் சசிகலா உறவினர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில்,
தி.மு.க., முன்னாள் அமைச்சர் மறைந்த பேராசிரியர் அன்பழகன் உச்ச
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அவ்வழக்கை பெங்களூரு நீதிமன்றத்திற்கு
மாற்றினார்.
லஞ்ச ஒழிப்புத் துறை, 500 - 1,000 ரூபாய் லஞ்சம்
வாங்கிய சாதாரண கிராம நிர்வாக அலுவலர்கள், பியூன்கள் இவர்கள் மீது தான்,
தங்கள் பராக்கிரம பார்வையை செலுத்துகிறது.
அதேநேரம், லஞ்ச புகாரில்
சிக்கும் உயர் அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் மீது வழக்குத் தொடர்ந்து,
தண்டனை வாங்கி கொடுத்ததாக வரலாறு இல்லை.
கடந்த 2021க்கு பின்,
தி.மு.க., அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை
சரியான நடவடிக்கை மேற்கொள்ளாததால் அவை நீர்த்துப் போய் விட்டன.
தற்போது
சில அமைச்சர்கள் மீதான சொத்துகுவிப்பு வழக்குகளை கூட, ஏனோதானோ என்று
முடித்து வைத்ததால், அவற்றை உயர் நீதிமன்றம் மீண்டும் மறு ஆய்வு செய்து
விசாரிக்க துவங்கியுள்ளது.
டாஸ்மாக் முறைகேடுகள் குறித்து
பதியப்பட்ட வழக்குகளில் கூட சரியான புலன் விசாரணை மேற்கொள்ளாததால்,
குளறுபடிகளை அமலாக்கத் துறை ஆராய்ந்து, டாஸ்மாக்கில், 1,000 கோடிக்கு மேல்
ஊழல் நடந்துள்ளது என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளது.
இப்படி,
'பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்' என்ற நிலையில் இருக்கும் லஞ்ச
ஒழிப்புத் துறையின் கடந்த கால நிகழ்வுகளை, சென்னை உயர் நீதிமன்றம்
கருத்தில் கொள்ளாமல், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மேற்கொள்ள தமிழக அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
குவாரி மோசடி
வழக்கில் பல்வேறு நிலைகளிலுள்ள அரசு அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். அதனால்,
மாநில லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு பதிலாக, சி.பி.ஐ., விசாரணைக்கு
உத்தரவிட்டிருந்தால் விசாரணை, சரியான பாதையில் செல்லும்!
வழக்கில் நீதியும் கிடைக்கும்!