PUBLISHED ON : ஏப் 26, 2025 12:00 AM

வ.ப.நாராயணன், செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
-அண்ணாதுரை மற்றும் கருணாநிதியால் கைவிடப்பட்ட மாநில சுயாட்சி கோரிக்கையை மீண்டும் முதல்வர் கையில் எடுத்திருப்பது வேடிக்கையாகவும், விநோதமாகவும் உள்ளது.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாச்சி கொள்கையை அண்ணாதுரை முன் வைத்தபோது,'மாநில சுயாட்சி வேண்டுமென்றால், மத்திய அரசிடமிருந்து நயா பைசா நிதி உதவி கிடைக்காது; தமிழகத்திற்கான நலத் திட்டங்களையும் மத்திய அரசால் கொண்டு வர முடியாது. மத்திய அரசின் எந்த வித உதவியும் இல்லாமல், தமிழகம் தனித்து விடப்படும்.
'தமிழகத்தை ஆள்வோர் தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும். சம்மதமா?' என்று கேட்டார், அப்போதைய பிரதமர் நேரு.
பயந்து போன அண்ணாதுரை, 'மாநில சுயாட்சியில் இத்தனை சூட்சுமங்கள் உள்ளதா' என்று அப்போதே அதை கைகழுவி விட்டார்.
மத்தியில் நேருவும், மாநிலத்தில் அண்ணாதுரையும் மறைந்த பின், சில ஆண்டுகள் கழித்து அரசியல் ஆதாயத்திற்காக, மாநில சுயாட்சி கோரிக்கையை கையிலெடுத்தார், கருணாநிதி.
அப்போது பிரதமராக இருந்த இந்திரா, கருணாநிதியின் மாநில சுயாட்சி கோரிக்கையை கடுமையாக எதிர்த்ததோடு, இதுபோன்ற கொள்கையுடைய தி.மு.க.,வுடன், காங்கிரஸ் தேர்தல் கூட்டணி வைக்காது என்று கண்டிப்புடன் தெரிவித்தார்.
அதிர்ந்து போன கருணாநிதி, காங்.,சின் தயவின்றி, எம்.ஜி.ஆரை தேர்தலில் தோற்கடிக்க முடியாது என்று தீர்மானித்து, அக்கோரிக்கையை கைவிட்டு இந்திராவிடம் சரணடைந்தார்.
தி.மு.க.,வின் சுயாட்சி வரலாறு இப்படி இருக்க, இன்று, மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, அதே நீர்த்துப் போன கோரிக்கையை கையிலெடுத்து நாடகமாடுகிறார், முதல்வர்.
இந்த பிரிவினை நாடகம் மோடி அரசிடம் எடுபடுமா என்ன?
இறையாண்மைக்கு எதிராக பேச வேண்டாம்!
எஸ்.கண்ணம்மா,
விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஜம்மு --
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் என்பது, தாங்கள்
பலகீனமடைந்து வருவதாக முஸ்லிம்கள் நினைப்பதால், பிரதமர் மோடிக்கு சொல்லும்
செய்தியாகும்' என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவின் மருமகனும், காங்.,
- எம்.பி., பிரியங்கா கணவருமான ராபர்ட் வாதேரா கூறியுள்ளார்.
தாக்குதலில்
இறந்தவர்களுக்காக நாடு முழுதும் வருந்தும் நிலையில், பாதிக்கப்பட்டோருக்கு
ஆறுதல் கூறாமல், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
ராஜா
வீட்டு கன்றுக் குட்டிபோல், சோனியாவின் நிழலில் குளிர் காயாமல், சாதாரண
குடிமகனாக, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளுக்கு போய் பார்க்கட்டும்...
அங்கு சிறுபான்மை ஹிந்துக்கள் பலமாக உள்ளனரா, பலவீனமாக இருக்கின்றனரா என்று
தெரியும்!
சமீபத்தில் பங்களாதேஷில் நடந்த கலவரத்தில்
ஹிந்துக்களின் வீடுகளும், கடைகளும் சூறையாடப்பட்டன; கோவில்கள்
தீக்கிரையாக்கப்பட்டன; மதம் மாறச் சொல்லி ஹிந்துக்கள்
கட்டாயப்படுத்தப்பட்டனர்; மறுத்தவர்கள் கொல்லப்பட்டனர். ஹிந்து என்ற ஒரே
காரணத்துக்காக, கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் வீடு தீ வைத்து
கொளுத்தப்பட்டது...
இந்தியாவில், முஸ்லிம்கள் அதுபோல் தான்
நடத்தப்படுகின்றனரா? உலகிலேயே சிறுபான்மையினர் பாதுகாப்பாகவும், வளமாகவும்
வாழ்வது இங்கு மட்டும் தான்!
முஸ்லிம்கள் பலகீனமடைந்து வருவதாக நினைப்பதால், இந்த பயங்கரவாத செயல் அரங்கேறியிருப்பதாக கூறியுள்ளார், ராபர்ட்.
பலவீனமானவர்கள்
தான் ஆயுதங்களை துாக்குவரா? சொந்த நாட்டிற்குள்ளேயே குண்டு வைத்து
பலியாகின்றனரே... அதுவும் பலவீனமாக இருப்பதால் தானா?
நம் நாட்டின்
கொள்கைகளால் பாகிஸ்தான் இஸ்லாமியருக்கு என்ன பாதிப்பு? எந்த விதத்தில்
அவர்கள் பலவீனமடைந்து, ஹிந்துக்களைக் குறிவைத்துக் கொல்கின்றனர்?
இந்திய
இறையாண்மையை குலைக்கும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, முடிந்தால்
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுங்கள்; அதற்கு மனம் இல்லை
என்றால் வாயை மூடி சும்மா இருங்கள். நாட்டின் இறையாண்மைக்கு எதிராகப் பேசி
அவமானப்பட வேண்டாம்!
யாருக்கு சொந்தம் யானைகள்?
ஆர்.கந்தவேல்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நடிகர் விஜயின்,
த.வெ.க., கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்'
என்று கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார், பகுஜன் சமாஜ்
கட்சியின் தமிழக பொதுச்செயலர் பெரியார் அன்பன் என்ற இளங்கோவன்.
இம்மனு, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
'தேசிய
கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சிக்கு, யானை சின்னம்
ஒதுக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் த.வெ.க., கட்சி கொடியில், யானைகள் இடம்
பெற்றிருப்பது, தேர்தல் விதிகளுக்கு முரணானது. ஏற்கெனவே, இதுகுறித்து
தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை' என்று
பகுஜன் சமாஜ் கட்சி வாதிட்ட நிலையில், த.வெ.க., தலைவர் விஜய், பொதுச்செயலர்
புஸ்ஸி ஆனந்த் ஆகியோர், வரும் ஏப்.,29ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென
நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அது சரி... பகுஜன் சமாஜ் கட்சியின்
சின்னம் யானை என்றால், நாட்டில் உள்ள யானைகள் அனைத்தும், அக்கட்சிக்கே
சொந்தமாகி விடுமா அல்லது யானை படத்தையும், யானை என்ற பெயரையும் இனி எவருமே
பயன்படுத்த கூடாதா?
காங்கிரஸ் கட்சியின் சின்னம், 'கை!'
அதனால், அனைவரும் தங்கள் வலது கையை, மணிக்கட்டு வரை வெட்டிக் கொள்ள வேண்டுமா?
கேரளாவில்
திரும்பிய பக்கமெல்லாம் யானைகள் தான்... அவற்றுள், குருவாயூர் மற்றும்
திருச்சூர் கோவில் யானைகளான மறைந்த கேசவனும், ராமச்சந்திரனும் புகழ்
பெற்றவை.
குருவாயூர் கோவிலின் மூலவர் சன்னிதானத்துக்கு முன், யானை
கேசவனின் புகைப்படம் பிரமாண்டமாக மாட்டப்பட்டிருக்கும். கேசவனின் சிலை
தேவஸ்தான விடுதி முகப்பில் நிறுவப்பட்டிருக்கும். அவற்றை அகற்றிவிட
வேண்டுமா?
இந்திய அஞ்சல் துறை, 'அரிய தபால் தலைகள்' என்ற பிரிவில்,
இதுவரை பல யானைகளின் புகைப்படம் போட்ட தபால் தலைகளை வெளியிட்டு உள்ளது.
அவற்றை எல்லாம் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் ஒப்படைத்து விட வேண்டுமா?
தேர்தல் கமிஷன் சின்னங்களின் படங்களை வேறு எவரும் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிடுவது சரியா?