PUBLISHED ON : அக் 21, 2026 12:00 AM
கோ.பாண்டியன், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கையே, பா.ஜ.,வும், பாட்டாளி மக்கள் கட்சியும் இருக்கும் அணியில் இணைய மாட்டோம் என்பது தான்; ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று கடந்த 25 ஆண்டுகளாக பேசி வந்தேன். தமிழகத்தில் கூட்டணி அரசு உருவாகும்; அதற்கான காலம் வரும் என்று திரும்ப திரும்ப சொல்லி வந்தேன். அதுபோலவே தற்போது, தமிழக அமைச்சரவையில், வி.சி.க., இடம் பிடித்துள்ளது’ என்று கூறியுள்ளார், திருமாவளவன்.
உண்மையிலேயே, கூட்டணி ஆட்சி உருவாகும் என்று திருமாவளவன் நினைத்திருந்தால், சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்து, தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டியது தானே?
மாறாக, ‘விஜய் போன்ற சக்திகளிடம் சிக்கினால், அதன் பின் தமிழகத்தை எவராலும் காப்பாற்ற முடியாது’ என்று, பேசியது ஏன்?
கடைசி வரை, தி.மு.க., கூடாரத்தில் இருந்து பண வரவு, கட்டப் பஞ்சாயத்துகள், சுகபோகங்களை அனுபவித்து விட்டு, தேர்தலில் தி.மு.க., தோல்வியுற்று, ஆட்சி அதிகாரத்தை இழந்த நிலையில், புதிய மரத்தை தேடி பறந்து வந்ததன் காரணம் என்ன... இனிமேலும், தி.மு.க., கூட்டணியில் இருந்தால், அதிகார பசியைத் தீர்த்துக் கொள்ள முடியாது என்று பேராசை தானே?
கடந்த 1996ல் மூப்பனார் கட்சி, 2004ல் ராஜ கண்ணப்பன் கட்சி, 2006ல் அ.தி.மு.க., 2016ல் மக்கள் நல கூட்டணி, 2019ல் தி.மு.க., 2026ல் த.வெ.க., இப்படி தேர்தலுக்கு தேர்தல் கட்சி தாவும் திருமாவுக்கு, அதிகாரம் இருக்கும் இடத்தை நோக்கி சாய்வதை தவிர, வேறு என்ன கொள்கை இருக்கிறது?
கட்சி துவங்கிய காலத்தில் இருந்து, இன்றுவரை திருமாவளவன் கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை எனும் போது, ‘பா.ஜ., – பா.ம.க., இருக்கும் கூட்டணியில் இணைய மாட்டோம்; அதுதான் வி.சி.க.,வின் கொள்கை’ என்று திருமாவளவன் கூறுவது விசித்திரமாக உள்ளது.
கடந்த 2001ல் பா.ஜ., – தி.மு.க., கூட்டணியிலும், 2011ல் தி.மு.க., – பா.ம.க., கூட்டணியிலும் வி.சி.க., இடம் பெற்றது எப்படி?
திருமாவளவன் பதில் சொல்வாரா?
