தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ கொள்கையை வைத்து, வளர்ச்சியை தடுக்கக்கூடாது!

 கொள்கையை வைத்து, வளர்ச்சியை தடுக்கக்கூடாது!

 கொள்கையை வைத்து, வளர்ச்சியை தடுக்கக்கூடாது!

1


PUBLISHED ON : செப் 02, 2026 01:33 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2026 01:33 AM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

முனைவர் பெ.வை.சே.கணேஷ் சுப்பிரமணி, பெரியகுளம், தேனி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தின் வளர்ச்சி என்பது மாநில அரசின் முயற்சிகளால் மட்டுமே உருவானது அல்ல; மாநில அரசின் திட்டங்களும், மத்திய அரசின் நிதி ஆதரவும் இணையும்போது தான் நிலையான, சமச் சீரான வளர்ச்சி சாத்தியமாகிறது.

இன்று, தமிழகம் தொழில், கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், விவசாயம், துறைமுகம், போக்குவரத்து போன்ற பல துறைகளில் முன்னிலையில் உள்ளது.

இத்துறைகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகள், தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், துறைமுக மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் தொழில்துறை முதலீடுகள் முக்கிய பங்காற்றுகின்றன.

கட்டமைப்பு வளர்ச்சி என்பது பொருளாதார முன்னேற்றத்தின் முதுகெலும்பு போன்றது.

தமிழகத்தில் சாலைகள், ரயில் பாதைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்றவற்றை மேம்படுத்துவதில், மத்திய அரசின் பங்கு குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே இணைப்புகள் மேம்படும்போது, பொருட்கள் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குறித்த நேரத்தில் சென்றடைகின்றன. இதனால், தொழில்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகின்றன.

விவசாயத்திலும் மத்திய அரசின் திட்டங்கள் முக்கியமானவை. விவசாயிகளுக்கான வருமான ஆதரவு, பயிர் காப்பீடு, பாசன மேம்பாடு, மண்வளப் பாதுகாப்பு போன்ற மத்திய அரசின் திட்டங்கள், மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு துணையாக உள்ளன.

இதேபோல், சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் மத்திய அரசின் திட்டங்கள் வாயிலாக, மருத்துவ வசதிகள், மருத்துவக் கல்லுாரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் விரிவடைகின்றன.

நிதி பங்கீடு, வரி வருவாய் பகிர்வு, மொழிக் கொள்கை, திட்ட முன்னுரிமைகள் போன்ற விஷயங்களில் மாநிலமும், மத்திய அரசும் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தாலும், அது மாநிலத்தின் வளர்ச்சியை தடுக்கக் கூடாது.

தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு, 'மத்திய - மாநில அரசுகள் போட்டி' என்பதற்கு பதிலாக, 'மத்திய - மாநில அரசுகள் கூட்டணி' என்பதே தேவை!

நிதி, தொழில்நுட்பம், கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் ஒருங்கிணைந்த திட்டமிடல் அவசியம்.

மத்திய அரசு மட்டும் தமிழகத்தை வளர்க்க முடியாது; மாநில அரசு மட்டும் நாட்டின் அனைத்து வளங்களையும் பயன்படுத்த முடியாது. இரு அரசுகளின் திறமையான கூட்டாண்மையே, ஒரு மாநிலத்தை வலிமையான பொருளாதார சக்தியாக மாற்றும்!

எனவே, மத்திய அரசோடு தமிழக அரசுக்கு அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும், வளர்ச்சி திட்டங்களில் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான், தமிழகம் முன்னேற்ற பாதையில் பயணிக்க முடியும்!

-----

இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க நினைக்கலாமா? கோ.பாண்டியன், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மதுரை யில் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் நிர்மல் குமார், செய்தியாளர் களிடம் பேசும் போது, 'முதல்வர் விஜய் பிரதமராக வேண்டும் என்று ஒட்டுமொத்த இந்திய மக்களும் ஆசைப்படுகின்றனர்' என்று கூறி உள்ளார்.

கடந்த 2014ல் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்னர் தான், உலக நாடுகள் இந்தியாவை மதிக்க துவங்கின. ஒட்டுமொத்த உலக தலைவர்களும் போற்றக்கூடிய ஓர் உன்னதமான தலைவராக மோடி விளங்கி வருகிறார்.

உலக பொருளாதார வளர்ச்சியில் மூன்றாவது இடத்தை நோக்கி இந்தியா வளர்ந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியர்கள் மோடியை தவிர, வேறு எவரையும் பிரதமர் நாற்காலியில் அமர வைத்து, அழகு பார்க்க விரும்ப மாட்டார்கள்.

மோடியை ஜெயிக்க வேண்டும் என்றால், அவரை விட தனிமனித ஒழுக்கம், நிர்வாகத் திறன், அரசியல் சாதுர்யம், கடுமையான உழைப்புடன், தேசத்தை எந்த சமரசமும் இல்லாமல் நேசிக்கும் ஒரு சிறந்த மாமனிதர் அரசியலுக்கு வர வேண்டும்.

அப்படி ஓர் அரசியல் தலைவர் இந்தியாவில் இருக்கிறாரா என்பது சந்தேகமே!

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சி அதிகாரத்தால், மக்களின் இதயங்களில் இன்றளவும் இடம் பிடித்துள்ளவர், எம்.ஜி.ஆர்.,

அவரோ, அவரது அமைச்சரவையில் இருந்தவர்களோ, அவரது கட்சியினரோ எம்.ஜி.ஆர்., பிரதமராக வேண்டும் என்று ஆசைப்பட்டதும் கிடையாது; பேசியதும் கிடையாது.

பிரதமர் கனவில் இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்து, இந்திய அளவில் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டார்.

அதேபோன்று, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம், 'நீங்கள் ஏன் பிரதமர் பதவிக்கு போட்டியிடக் கூடாது?' என்று செய்தியாளர்கள் ஒரு முறை கேட்ட போது, 'என் உயரம் என்னவென்று எனக்கு தெரியும்' என, 'பளிச்'சென்று சொன்னார்.

அதேபோல் தன் உயரம் என்னவென்று முதல்வர் விஜய்க்கும் தெரிந்திருக்கக் கூடும்; அதனால், அமைச்சர் நிர்மல் குமார், முதல்வரை தாஜா செய்வதற்காக அளவுக்கு அதிகமாக கூவ வேண்டாம்!

இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க நினைத்தால், இருப்பதும் இல்லாமல் போய் விடும்!

------

சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!


அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாநிலம் முழுதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 38 அரசு அலுவலகங்களில் கணக்கில் வராத, 28.24 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்; 90 லட்சம் ரூபாய் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வழியாக அனுப்பப்பட்டுள்ளதையும் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கைது செய்துள்ளனர்.

ஒரு நாளில் நடத்திய அதிரடி ரெய்டில் மட்டுமே கிட்டத்தட்ட, ஒரு கோடியே, 18 லட்சத்து, 24 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றி உள்ளனர் என்றால், மீதி உள்ள அரசு அலுவலகங்களில் எத்தனை கோடி லஞ்ச பணம் கைமாறி இருக்கும்!

இதேபோன்று, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து தமிழகம் முழுதும் அதிரடி சோதனை நடத்தினால், அரசு அலுவலகங்களில் ஊழல் செய்வது ஓரளவாவது கட்டுப்படும்.

அதேபோன்று, லஞ்ச ஒழிப்பு போலீசார் எந்தளவுக்கு அதிரடி சோதனை நடத்துகின்றனரோ, அதேவேகத்தில் சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us