PUBLISHED ON : ஆக 10, 2024 12:00 AM

ஆகஸ்ட் 10, 1937
சிவகங்கை மாவட்டம், ஆத்தங்குடியில், ஆறுமுகம் -- உண்ணாமலை தம்பதிக்கு மகனாக, 1937ல், இதே நாளில் பிறந்தவர் ஆறு.அழகப்பன்.இவர், அண்ணாமலை பல்கலையில் படித்து, அங்கேயே விரிவுரையாளராக சேர்ந்து, துறைத் தலைவராக உயர்ந்தார். 38 ஆண்டுகள் பணி காலத்தில், பதிப்புத்துறை பொறுப்பாளராகி, 120 நுால்களை பதிப்பித்தார். அகில இந்திய பல்கலை தமிழாசிரியர் மன்ற துணைத் தலைவர், தமிழக புலவர் குழு இணைச் செயலர், சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார். தமிழ்த்தாய் சிலை, ரிஷிகேஷ், திருவள்ளுவர் சிலை அமைப்பு உள்ளிட்ட பணிகளை செய்தார்.
தமிழை செம்மொழியாக்க வலியுறுத்தி, பல தமிழ்ச் சங்கங்களை இணைத்து போராடினார். அதற்காக, பார்லிமென்ட் முன் 100 தமிழறிஞர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார். தான் சேமித்த அரிய நுால்களை, மதுரை கருணாநிதி நுாலகத்துக்கு நன்கொடையாக வழங்கினார்.'கலைமாமணி, திருவள்ளுவர், கலைஞர் பொற்கிழி உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். இவரது நுால்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. 'நாடகத் தமிழ்' இதழின் ஆசிரியரான இவரது, 88வது
பிறந்த நாள் இன்று!

