PUBLISHED ON : ஆக 24, 2024 12:00 AM

ஆகஸ்ட் 24, 1988
மயிலாடுதுறை மாவட்டம், ஆறுபாதி எனும் ஊரில், சீனிவாச அய்யர் - மீனாட்சி தம்பதியின் மகனாக, 1904, ஏப்ரல் 1ல் பிறந்தவர் பரசுராம அய்யர். இவர், மயிலாடுதுறையில் பள்ளி படிப்பை முடித்தார். அங்கிருந்த வசந்தா அச்சகத்தில் ஊழியராகி தொழில் கற்றார். கும்பகோணம் காமாட்சி அச்சகத்தில் பணிபுரிந்தார்.
புதுக்கோட்டையில் இருந்து வெளியான, 'தேசபந்து' நாளிதழின் அச்சகத்தில் அச்சு கோர்ப்பவராக பணியாற்றினார். புதுக்கோட்டை தர்மராஜ பிள்ளை நடத்திய, கண்ணபிரான் அச்சகத்தை வாங்கினார். அதிலிருந்து, 'பாலர் மலர், டமாரம், சங்கு' உள்ளிட்ட சிறுவர் இதழ்களை அச்சிட்டு வெளியிட்டார்.
தமிழ் நிலைய நுால்களையும், புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நுால்களையும் சிறப்பாக அச்சிட்டு வெளியிட்டார். அழ.வள்ளியப்பாவை ஆசிரியராக்கி, 'டிங் டாங்' எனும் சிறார் வார இதழை வெளியிட்டார். அதன் தலையங்கத்தை எழுதிய இவர், 1988ல் தன் 84வது வயதில் இதே நாளில் மறைந்தார்.
சிறார் இதழ்களை வளர்த்த சீர்மிகு அச்சகர் மறைந்த தினம் இன்று!

