PUBLISHED ON : ஆக 26, 2024 12:00 AM

ஆகஸ்ட் 26, 1969
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில், சுப்பிரமணியம் - வாலாம்பாள் தம்பதியின் மகனாக, 1904, ஜனவரி 4ல் பிறந்தவர், எஸ்.எஸ்.வாசன் எனும் சுப்பிரமணியம் சீனிவாசன்.
இவர் தன், 4வது வயதில் தந்தையை இழந்து, உள்ளூர் பள்ளியில் படித்தார். சென்னை பச்சையப்பன் கல்லுாரியில், 'இன்டர்மீடியட்' முடித்து, பத்திரிகைகளுக்கு விளம்பரம் சேகரிக்கும் பணி செய்தார். சைனா பஜார் பொருட்களை பத்திரிகைகளில் விளம்பரம் செய்து, 'மெயில் ஆர்டர்' முறையில் அனுப்பி வைத்தார். 'மிஸ்ட்ரீஸ் ஆப் மேரீட் லைப்' எனும் நுாலை எழுதி, விற்றார். பூதுார் வைத்தியநாத அய்யர் நடத்திய, 'ஆனந்த விகடன்' இதழை வாங்கி, ஜனரஞ்சகமான இதழாக்கினார்.
அதில், அவர் எழுதிய, 'சதி லீலாவதி' தொடர்கதை, திரைப்படமாகி வெற்றி பெற்றது. கல்கி எழுதிய, 'தியாக பூமி' கதையை, கே.சுப்பிரமணியம் இயக்கினார். இவர், 'ஜெமினி ஸ்டூடியோ'வை துவக்கி, அந்த படத்தை வெளியிட்டார். தொடர்ந்து, நந்தனார், அவ்வையார், இரும்புத்திரை, ஒளி விளக்கு உள்ளிட்ட, 28 தமிழ், 19 தெலுங்கு, 24 ஹிந்தி படங்களை தயாரித்தார். தொட்ட துறைகளில் எல்லாம் புதுமைகளால், வெற்றிக்கொடி நாட்டிய இவர், தன், 65வது வயதில், 1969ல், இதே நாளில் மறைந்தார்.
'விளம்பரமே வியாபாரத்தின் முதுகெலும்பு' என, உணர்த்திய சிறந்த கலைஞன் மறைந்த தினம் இன்று!

