PUBLISHED ON : செப் 20, 2024 12:00 AM

செப்டம்பர் 20, 1933
பிரிட்டன் தலைநகர் லண்டனில், ஐரிஷ் பாரம்பரியத்தைச் சேர்ந்த வில்லியம் பைஜ்வூட் - எமிலி ரோஜ் மோரிஸ் தம்பதியின் மகளாக, 1847, அக்., 1ல் பிறந்தவர் அன்னி. லண்டனில் கல்லுாரி படிப்பை முடித்தார். கிறிஸ்துவ மதகுருவான பிராங்க் பெசன்டை மணந்தார். அவர், கிறிஸ்துவ மதச் சடங்குகளை தீவிரமாக கடைப்பிடிக்கும்படி வற்புறுத்தியதால், அவரை பிரிந்தார்.
இந்திய தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு இங்கு வந்தவர், பிரம்மஞான சங்கத்தில் சேர்ந்தார். காங்., சார்பில் நடந்த விடுதலை போராட்டங்களில் பங்கேற்றார். 1917, டிசம்பரில், கோல்கட்டாவில் நடந்த மாநாட்டில் அகில இந்திய காங்., தலைவராக ஓராண்டுக்கு தேர்வானார்.
திலகர் முன்னெடுத்த, 'ஹோம் ரூல்' இயக்கத்தில்,அருண்டேல், சி.பி.ராமசாமி அய்யர், பி.பி.வாடியா உள்ளிட்டோரை இணைத்து செயல்பட்டார்.
தீவிர அரசியலில் இருந்து தன், 81வது வயதில்விலகிய இவர், பிரபல தத்துவ மேதையான தன் வளர்ப்பு மகன் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து, பிரம்மஞான சபை முன்னேற்றத்தில் தீவிரமாக ஈடுபட்டு, 1933ல் தன், 85வது வயதில், இதே நாளில் சென்னையில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!