PUBLISHED ON : டிச 13, 2024 12:00 AM

டிசம்பர் 13, 2012
சென்னை கோடம்பாக்கத்தில், 1933ல் பிறந்தவர் கர்ணன். இவர், பள்ளி படிப்பை முடித்து, ராணுவத்தில்சேர திட்டமிட்டிருந்தார். பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், ரேவதி ஸ்டூடியோவில், ஒளிப்பதிவாளர்களான பி.என்.சுந்தரம், கமால் கோஷ், பொம்மன் டி.ரானி, பி.எஸ்.ரங்கா உள்ளிட்டோரிடம் உதவியாளராக பணியாற்றினார்.
அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில், டபிள்யூ.ஆர்.சுப்பா ராவிடம் பணியாற்றியபோது, சாகச காட்சிகளை, கர்ணன் படமாக்கிய விதத்தை பார்த்த எம்.ஜி.ஆர்., இவரை நிறைய பயன்படுத்தினார்.
பிரசிடென்ட் பஞ்சாட்சரம் படத்தில் ஒளிப்பதிவாளரான இவர், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், சிம்லா ஸ்பெஷல், பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
காலம் வெல்லும், ஜக்கம்மா, கங்கா, ஜம்பு, ஒரே தந்தை உள்ளிட்ட படங்களையும் இயக்கினார்.
சண்டை காட்சிகளை தன் அபாரமான ஒளிப்பதிவால் விறுவிறுப்பாக்கிய இவர், 2012ல் தன் 79வது வயதில், இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!

