திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தர் உடலுக்கு அஞ்சலி
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தர் உடலுக்கு அஞ்சலி
UPDATED : டிச 19, 2025 02:03 PM
ADDED : டிச 19, 2025 11:24 AM

மதுரை: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரத்தில், தற்கொலை செய்து கொண்ட முருக பக்தர் பூர்ண சந்திரன் உடலுக்கு, பா.ஜ., மாநில செயலாளர் ராம சீனிவாசன் அஞ்சலி செலுத்தினார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக்கோரியும், தி.மு.க., அரசின் நிலைபாட்டை கண்டித்தும் மருந்து விற்பனை பிரதிநிதியான முருக பக்தர் பூர்ணசந்திரன் 40, மதுரை போலீஸ் அவுட்போஸ்ட் பூத்திற்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.
அவரது உடலை மீட்ட போலீசார் மதுரை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
பூர்ண சந்திரன் மரணத்துக்கு, பக்தர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பா.ஜ., மாநில செயலாளர் ராம சீனிவாசன் வருகை தந்தார். அஞ்சலி செலுத்திய பிறகு கூறியதாவது:
பூர்ண சந்திரனின் மரணம் துரதிர்ஷ்டவசமானது. நேற்று முதல் இந்த துக்கம் தமிழர்களின் தொண்டையை அடைக்கிறது. தர்மத்திற்காக வாழ வேண்டுமே தவிர தர்மத்திற்காக இறக்கக்கூடாது. அதை பா.ஜ. ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது, என்றார்.

