PUBLISHED ON : டிச 27, 2024 12:00 AM

டிசம்பர் 27, 1889
ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகில் உள்ள அகத்திருப்பு கிராமத்தில் ஆயர்பாடி கோனார் - இருளாயி அம்மாள் தம்பதியின் மகனாக, 1889ல் இதே நாளில் பிறந்தவர் கார்மேகக் கோனார்.
இவர், மதுரை செந்தமிழ்க் கல்லுாரியில் படித்து, உ.வே.சாமிநாத அய்யர் பரிந்துரையில், அமெரிக்கன் கல்லுாரியில் பேராசிரியராக சேர்ந்தார். அங்கு 37 ஆண்டுகள் பணியாற்றி, தமிழ் மொழித்துறை தலைவராக உயர்ந்தார்.
இவர், 'நல்லிசைப் புலவர்கள், அறிவுநுால் திரட்டு, கண்ணகி தேவி, செந்தமிழ் இலக்கிய திரட்டு' உள்ளிட்ட பல்கலை பாடநுால்கள் மற்றும் ஆராய்ச்சி நுால்களை எழுதினார். சென்னை பல்கலை, கரந்தை தமிழ்ச்சங்கம் உள்ளிட்டவற்றில் இவர் நிகழ்த்திய உரைகளால், 'சிறப்புரை வித்தகர்' என்ற பட்டத்தை பெற்றார்.
திருக்குறள் ஆராய்ச்சிக்காக, 'பரிமேலழகர் கழகம்' என்ற அமைப்பை துவக்கினார். தமிழக அரசு, இவரது நுால்களை நாட்டுடைமை ஆக்கி, இவரது பெயரை மதுரையில் ஒரு தெருவுக்கு சூட்டி பெருமைப்படுத்தியது. இவர், தன் 67வது வயதில், 1957, அக்டோபர் 22ல் மறைந்தார்.
'செந்நாப்புலவர் பிறந்த தினம் இன்று!

