மாற்றுத்திறனாளிகள் பரிதாபத்திற்கு உரியோர் அல்ல; பலசாலிகள்: கவர்னர் ரவி
மாற்றுத்திறனாளிகள் பரிதாபத்திற்கு உரியோர் அல்ல; பலசாலிகள்: கவர்னர் ரவி
ADDED : டிச 02, 2025 03:26 AM

சென்னை: ''மாற்றுத்திறனாளிகள் பரிதாபத்திற்கு உரியவர்கள் அல்ல. அவர்கள் நம்மை விட திறமையான பலசாலிகள்,'' என, கவர்னர் ரவி தெரிவித்தார்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி, விளையாட்டு, சுயதொழில், கலைத் துறை உள்ளிட்ட, ஏழு பிரிவுகளில் சிறந்து விளங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு செய்யும் விழா, சென்னையில் நேற்று நடந்தது.
கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் நடந்த விழாவில், 68 மாற்றுத் திறனாளிகளுக்கு, கவர்னர் ரவி சான்றிதழ் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.
உண்மையல்ல பின், அவர் பேசியதாவது:
ராஜ்பவன் என்ற பெயரை, லோக் பவன் என, மாற்றிய பின் நடக்கும் முதல் நிகழ்ச்சி இது. சமூகத்தில் சிலர் பேசுகையில், உடல் ஊனமுற்றோர், ஊனம் உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர்; ஆனால், அது உண்மையல்ல.
மனித நாகரிகம் பல சவால்களை கடந்து தான் முன்னேறியது. எவ்வளவு பெரிய சவால்கள் வந்தாலும், அவற்றை கடந்து செல்லும் மன வலிமை தான், மனிதரின் உண்மையான பலம். மாற்றுத்திறனாளிகள், அந்த மனவலிமையின் உயிரோட்டமாக உள்ளனர்.
அவர்களது சவால்கள் நிறைந்த வாழ்க்கை, அவர்களின் கனவுகளை தோற்கடிப்பதில்லை. மாறாக, சவால்களை எதிர்த்து மாற்றுத்திறனாளிகள் சாதிக்கின்றனர்.
உண்மையில் ஒவ்வொரு தனி மனிதருக்குள்ளும் ஒரு குறை உள்ளது. வெளிப்படையாக தெரியாவிட்டாலும், நம் அனைவருக்குள்ளும் குறைகள் உள்ளன. சமூகம் தன் பார்வையை மாற்ற வேண்டும்.
உடல் ஊனம், அறிவு குறைவு, பார்வை குறைவு என, எதுவாக இருந்தாலும், அவர்களும் நம்மை சேர்ந்தவர்கள் என, உணர வேண்டும். அவர்களும் இந்நாட்டின் குடிமக்கள் தான். நமக்கு கிடைக்கும் உரிமை, அவர்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும்.
தற்போது விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாற்றுத்திறனாளிகள் சாதிக்கின்றனர். இருப்பினும், பலர் இன்னும் தங்களது திறமையை வெளிப்படுத்த முடியாத சூழலில் உள்ளனர். திறமை இல்லாததால் அல்ல; வாய்ப்பு கிடைக்காததால்.
அவர்களுக்கான வாய்ப்பு மற்றும் தேவையை வழங்குவது அரசின் கடமை. சமூகத்தில் பெண்களுக்கு தனி கழிப்பறை அமைப்பது, ஒரு காலத்தில் உதவியாக பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அது உரிமையாக மாறி விட்டது.
சவால் அதேபோல், உடல் மற்றும் அறிவு சார்ந்த சவால்களை எதிர்கொள்வோருக்கான எல்லா வசதியையும் ஏற்படுத்துவது உரிமை சார்ந்தவை. இதை ஏற்படுத்துவது, அரசு மற்றும் சமூகத்தின் பொறுப்பு.
எனவே, மாற்றுத்திறனாளிகள் பரிதாபத் திற்கு உரியவர்கள் அல்ல. அவர்கள் நம்மை விட திறமையான பலசாலிகள்.
இவ்வாறு அவர் பேசினார்.

