PUBLISHED ON : ஜன 12, 2025 12:00 AM

ஜனவரி 12, 1863
மேற்கு வங்க தலைநகர்கோல்கட்டாவில், விஸ்வநாத் தத்தா - புவனேஸ்வரி தேவி தம்பதிக்கு மகனாக, 1863ல் இதே நாளில் பிறந்தவர் நரேந்திரநாத் தத்தா எனும் விவேகானந்தர்.
இவர், சிறு வயதிலேயே தியானத் தின் வாயிலாக நல்ல நினைவாற்றல், பகுத்தறிவு, விளையாட்டு திறன்களை பெற்றிருந்தார். கோல்கட்டா மாநில கல்லுாரியில் படித்தார். பின், ஸ்காட்டிஷ் சர்ச் கல்லுாரியில் மேலைநாட்டு தத்துவங்களை படித்தார். அப்போது, கடவுள் வழிபாட்டு முரண்களை அறிந்தார்.
அது பற்றி சுவாமி ராமகிருஷ்ணரிடம் விளக்கம் பெற்று, அவரின் சிஷ்யரானார். குருவின் மறைவிற்கு பின் துறவியானார். கன்னியாகுமரி கடல் பாறையில் அமர்ந்து, மூன்று நாட்கள் தியானம் செய்தார். 1893ல், அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த உலக சமய மாநாட்டில் ஹிந்து தத்துவங்களை விளக்கினார்.
தன் குருவின் நினைவால் உலகம் முழுதும் ராமகிருஷ்ண மடங்களை நிறுவி, ஆன்மிக பணிகளில் ஈடுபட்டார். 'உன்னையும், கடவுளையும், உழைப்பையும் நம்பு' என கூறியவர், 1902, ஜூலை 4ல் தன் 39வது வயதில் மறைந்தார்.
இந்திய இளைஞர் தினமாக கடைப்பிடிக்கப்படும் ஆன்மிகவாதியின் பிறந்த தினம் இன்று!

