PUBLISHED ON : ஜன 23, 2025 12:00 AM

ஜனவரி 23, 1814
பிரிட்டனின், லண்டனில் கவிஞர் ஆலன் கன்னிங்ஹாம் - ஜெனி வாக்கர் தம்பதியின் மகனாக, 1814ல் இதே நாளில் பிறந்தவர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்.
இவர், லண்டனின் கிறைஸ்ட் மருத்துவமனைப் பள்ளியில் படித்து, கிழக்கிந்திய கம்பெனியின் அடிஸ்கோம்ப் செமினரியில், மாணவர் படைப் பயிற்சியையும், ராயல் இன்ஜினியர்ஸ் கார்டனில் தொழில்நுட்பக் கல்வியை முடித்தார். அப்போதைய இந்தியாவின் வங்காளத்தில் ராணுவ இன்ஜினியராக பொறுப்பேற்றார்.
இந்திய பாரம்பரியத்தின் மீது ஆர்வமுள்ள நண்பருடன் பழகி, தொல்லியல் மீது ஈடுபாடு கொண்டார். 'ஜர்னல் ஆப் தி ஏசியாட்டிக் சொசைட்டி ஆப் பெங்கால்' இதழில், மங்கியாலா ஸ்துாபி பற்றிய கட்டுரையை வெளியிட்டார். தொடர்ந்து, சாஞ்சி, சாரநாத்தில் அகழாய்வு செய்து, பவுத்த வரலாற்றை ஆவணப்படுத்தினார்.
தன் அகழாய்வு முடிவுகளை, வரைபடம், ஆவணங்கள், புகைப்படங்களுடன், 30 தொகுதி நுால்களாக வெளியிட்டார். தரவுகளின் அடிப்படை யில், பண்டைய இந்திய வரலாற்றை எழுதியவர், தன் 79வது வயதில், 1893, நவம்பர் 28ல் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!

