PUBLISHED ON : நவ 02, 2026 12:00 AM

நவம்பர் 2: மேற்கு வங்க மாநிலம், ஹவுரா மாவட்டம், பைக்பாரா கிராமத்தில் தாரக்நாத் சர்க்கார் – அகோர்மணி தம்பதியின் மகனாக, 1833ல் இதே நாளில் பிறந்தவர், மகேந்திரலால் சர்க்கார்.
சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர், தாய்மாமன்களால் வளர்க்கப்பட்டார். ஹேர் பள்ளி, இந்து கல்லுாரியில் படித்தார். கொல்கட்டா மருத்துவக் கல்லுாரியில் மருத்துவப் பட்டமும், கொல்கட்டா பல்கலையில் எம்.டி., பட்டமும் பெற்றார்.
மருத்துவராக பணியாற்றி, பின் ஹோமியோபதி மருத்துவ முறையை பரப்புவதில் முக்கிய பங்காற்றினார். 1868-ல், ‘கல்கத்தா ஜர்னல் ஆப் மெடிசின்’ என்ற மருத்துவ இதழை நடத்தினார்.
அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியர்கள் தன்னிறைவு பெற வேண்டும் என்ற நோக்கில், 1876 ஜூலை 29-ல், கொல்கட்டாவில் ஐ.ஏ.சி.எஸ்., எனும் இந்திய அறிவியல் வளர்ச்சி கழகத்தை நிறுவினார். இங்கு, பின்னாளில் சர் சி.வி.ராமன் ஆராய்ச்சி களை மேற்கொண்டு, நோபல் பரிசு பெற்றார்.
இந்தியாவில் நவீன அறிவியல் ஆராய்ச்சிக்கு அடித்தளமிட்ட இவர், 1904, பிப்ரவரி 23-ல், தன் 70-வது வயதில் மறைந்தார். இவரது நினைவாக இந்திய அஞ்சல் துறை, 2009 நவம்பர் 2-ல் சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டது.
இவரது பிறந்த தினம் இன்று!
