PUBLISHED ON : நவ 10, 2026 12:00 AM

நவம்பர் 10, 1977
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் லட்சுமணன் செட்டியார் – பிச்சையம்மை தம்பதியின் மகனாக 1926, மே 22ல் பிறந்தவர் ராமநாதன். தேவகோட்டை, திருச்சியில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். தமிழ்த்தென்றல் திரு.வி.க., இவருக்கு, ‘தமிழ்வாணன்’ என பெயர் சூட்டினார்.
எழுத்து, இதழியல் துறைகளில் ஆர்வம் கொண்ட இவர், ‘கிராம ஊழியன்’ இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றினார். பின், ‘கல்கண்டு’ இதழின் ஆசிரியராக பொறுப்பேற்று, சிறுவர்கள், இளைஞர்களிடம் வாசிப்பு பழக்கத்தையும், பொது அறிவையும் வளர்த்தார்.
துப்பறியும் நாவல்களில், ‘சங்கர்லால்’ என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி புகழ் பெற்றார். ‘சிரிக்காதே, சுட்டுத்தள்ளு, அல்வா துண்டு, பயமா இருக்கே’ உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதினார். தன் மனைவி பெயரில் மணிமேகலை பிரசுரத்தை தொடங்கி, ஏராளமான புத்தகங்களை வெளியிட்டார்.
தொப்பி, கருப்பு கண்ணாடி அணிந்த தனித்துவமான தோற்றத்துடன், ‘துணிவே துணை’ என்ற முழக்கத்தால் வாசகர்களிடம் புகழ் பெற்றார்; வாசகர்களின் கேள்விகளுக்கு சுருக்கமாகவும், சுவையாகவும் பதிலளிக்கும் திறன் பெற்றிருந்தார்.
இலக்கியத்தை எளிமைப்படுத்தியதுடன், சமூகத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பேனா முனையை தீட்டிய இவர், தன் 51வது வயதில், 1977ல் இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!
