PUBLISHED ON : நவ 09, 2026 12:00 AM

நவம்பர் 9, 1937
மதுரை மாவட்டம், கீழ்சந்தைப்பேட்டையில், உருது கவிஞர் சையத் அஹமத் – ஜைனத் பேகம் தம்பதியின் மகனாக, 1937ல் இதே நாளில் பிறந்தவர், அப்துல் ரகுமான். மதுரையில் பள்ளி படிப்பை முடித்தவர், மதுரை தியாகராஜர் கல்லுாரியில் இளங்கலை, முதுகலை பட்டங்களை பெற்றார்.
கவிதைகள் மீது கொண்ட தீராத பற்றால், மரபு கவிதைகளுடன் புதுக்கவிதைகளையும் படைத்து, தமிழ்க்கவிதை உலகில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தினார். இவரது, ‘பால்வீதி, நேயர் விருப்பம், கரைகளே நதியாவது இல்லை, அதிசய மலர்’ உள்ளிட்ட பல கவிதை தொகுப்புகள் புகழ் பெற்றவை.
புதுக்கவிதை உலகில் தனி முத்திரை பதித்ததால், ‘கவிக்கோ’ என போற்றப்பட்டார். வானம்பாடி கவிஞர்கள் இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டார். வாணியம்பாடி இஸ்லாமிய கல்லுாரியில், 30 ஆண்டு கள் தமிழ் பேராசிரியராக பணியாற்றினார். ‘ஆலாபனை’ கவிதை தொகுப்புக்காக, 1999-ல் சாகித்ய அகாடமி விருதும், கலைமாமணி, பாவேந்தர் பாரதிதாசன் உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றார். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் பணியாற்றினார்.
தமிழ் இலக்கியத்தில், ‘ஹைக்கூ, கசல்’ உள்ளிட்ட கவிதை வகைகளின் வளர்ச்சிக்கு பங்களித்த இவர், தன் 80வது வயதில் 2017, ஜூன் 2ல் சென்னையில் காலமானார்.
இவரது பிறந்த தினம் இன்று!
