PUBLISHED ON : நவ 25, 2026 12:00 AM

நவம்பர் 25: பிரிட்டிஷ் ஆட்சியில் ஒருங்கிணைந்த இந்தியாவாக இருந்த, இன்றைய பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாதில், லீலாராம் – வரன்தேவி தம்பதியின் மகனாக, 1879ல் இதே நாளில் பிறந்தவர், தயாள் லீலாராம் வாஸ்வானி எனும் டி.எல்.வாஸ்வானி.
உள்ளூரில் பள்ளிக்கல்வியை முடித்தவர், பம்பாய் பல்கலையில் இளங்கலை, முதுகலை பட்டங்களை பெற்றார். கொல்கட்டா, கராச்சி கல்லுாரிகளில் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றினார். 1910ல் ஜெர்மனியின் பெர்லினில் நடந்த, ‘உலக மதங்கள்’ மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்றார்.
பெண் கல்வி, சமூக முன்னேற்றத்தை வலியுறுத்தியவர், 1933ல் பெண்களுக்கான மீரா பள்ளி, ‘சாது வாஸ்வானி மிஷன்’ ஆகியவற்றை தொடங்கி, கல்வி, ஆன்மிகப் பணிகளை விரிவுபடுத்தினார். இந்திய விடுதலை இயக்கத்திலும் பங்களித்த இவர், ‘மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள், பறவைகள் மீதும் அன்பு செலுத்த வேண்டும்; இறைச்சி உண்பதை தவிர்க்க வேண்டும்’ என, வலியுறுத்தினார்.
ஆங்கிலம், சிந்தி மொழிகளில் பல நுால்களை எழுதிய இவர், 1966 ஜனவரி 16ல், தன் 86வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த நாளான நவ., 25, விலங்குகள் வதை தடுப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இவரது பிறந்த தினம் இன்று!
