PUBLISHED ON : மார் 16, 2025 12:00 AM

மார்ச் 16, 1918
திருப்பூர் மாவட்டம், சோமனுாத்து என்ற ஊரில் அப்பாஜி செட்டியாரின் மகனாக, 1918ல் இதே நாளில் பிறந்தவர் எஸ்.ஏ.நடராஜன்.
தன், 8வது வயதில் தந்தையை இழந்ததால், வாளவாடியில் இருந்த பெரியம்மா அம்முலம்மாவிடம் வளர்ந்தார். உடுமலையில் ஆறாம் வகுப்பு வரை படித்தார். கோவை எடிசன் அரங்கில் நடந்த நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் நாடகங்களால் ஈர்க்கப்பட்டு, அதில் பெண் வேடங்களில் நடித்தார்.
கும்பகோணத்தில் நடந்த, 'இன்பசாகரன்' நாடகத்தில் நம்பியாருக்கு பதில், உத்தமபாதனாக நடித்து புகழ் பெற்றார். மங்களகான சபா, சேலம் பாய்ஸ் கம்பெனி நாடகங்களிலும் நடித்தார். ஆர்.சுந்தரம் இயக்கிய சதி சுகன்யா திரைப்படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமானார்.
மந்திரிகுமாரியில், ராஜகுருவின் மகனாக நடித்தார். தொடர்ந்து, 'வேலைக்காரி, மாங்கல்யம், அமுதவல்லி, சங்கிலி தேவன்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். சிரித்தபடியே, வெண்கல குரலில் வசனம் பேசும் திறமையுள்ள இவர் தான், தமிழ் சினிமாவின் முதல் அழகிய வில்லன். தன் சொந்த செலவில் படம் தயாரித்து நஷ்டம் அடைந்து, சினிமாவில் இருந்து ஒதுங்கியதால், இவர் மறைந்த தேதி கூட பதிவாகவில்லை.
இவரது பிறந்த தினம் இன்று!