PUBLISHED ON : ஏப் 24, 2025 12:00 AM

ஏப்ரல் 24, 1934
கடலுார் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில், தண்டபாணி பிள்ளை - மகாலட்சுமி தம்பதியின் மகனாக, 1934ல், இதே நாளில் பிறந்தவர் ஜெயகாந்தன். இவர், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.
சிறுவயதிலேயே பாரதியின் எழுத்துகளாலும், பொதுவுடைமைக் கோட்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டார். சென்னை, ஜனசக்தி அச்சகத்தில் அச்சுக் கோர்ப்பாளராக பணியாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது, அதிலிருந்து விலகி, தஞ்சையில் ஒரு செருப்பு கடையில் வேலை பார்த்தார்.
அங்கு மனிதர்களையும், அரசியலையும் நுணுக்கமாக ஆராய்ந்தார். இவரது சிந்தனைகள், 'சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன்' இதழ்களில் சிறுகதை, நாவல்களாக வெளியாகின.
இவரது, 'அக்கினிப் பிரவேசம், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், கைவிலங்கு, ஈஸ்வர அல்லா தேரே நாம்' உள்ளிட்ட படைப்புகள் இன்றும் விவாதிக்கப்படுகின்றன. 'உன்னைப்போல் ஒருவன், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' உள்ளிட்ட இவரது திரைப்படங்களும் பேசப்பட்டன. இவர் தன், 81வது வயதில், 2015, ஏப்ரல் 8ல் மறைந்தார்.
நாட்டின் உயரிய விருதான, ஞானபீடம் பெற்றவர் பிறந்த தினம் இன்று!

