ADDED : பிப் 01, 2026 01:33 AM

புதுடில்லி: ஐரோப்பிய யூனியனுடன் சமீபத்தில் வணிக ஒப்பந்தம் கையெழுத்தானது. நம் நாட்டின் மீது அமெரிக்கா அதிக வரி விதித்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் மிகவும் பயன் தரும் என சொல்லப்படுகிறது.
இந்த வெற்றிகரமான ஒப்பந்தத்தின் பின்னணியில் இருப்போர் இருவர். ஒருவர், வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல். மற்றொருவர், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். இதில் மிகவும் பிஸியாக இருப்பவர் பியுஷ் கோயல் தான்.
இவர், தமிழக சட்டசபை தேர்தலின் பா.ஜ., பொறுப்பாளராகவும் உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உட்பட பா.ஜ., கூட்டணி தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.
இந்த கூட்டம் நடப்பதற்கு சில நாட்கள் முன்பிருந்தே, சென்னையில் முகாமிட்டிருந்தார் கோயல். எப்படியாவது தினகரனை கூட்டணியில் இணைத்து, பிரதமருடன் மேடையில் ஏற்றிவிட வேண்டும் என கடும் முயற்சி செய்து, வெற்றியும் பெற்றார். ஐரோப்பா ஒப்பந்தம் போலவே, தினகரனுடனும் ஒப்பந்தம் போட்டுவிட்டார்.
தமிழக தேர்தல் நடக்கும் தினத்திற்கு, 10 நாட்கள் முன்பாக சென்னையில் தங்கி மேற்பார்வையிட உள்ளாராம் கோயல். இப்படி உழைக்கும் இவருக்கு கால் மூட்டில் வலி அதிகமாக உள்ளதாம்.
அதற்கு, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பின், மும்பையின் பிரபல மருத்துவமனையில், 'அட்மிட்' ஆகி, ஆப்பரேஷன் செய்து கொள்ளவிருக்கிறார். 'எனக்கு சில நாட்கள் ஓய்வு வேண்டும்' என பிரதமரிடமும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் கேட்டுள்ளாராம் பியுஷ் கோயல்.

