மேற்கு வங்கத்தில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றும் நாள் 'வெகு தொலைவில் இல்லை!': ஊடுருவல்காரர்களை ஓட்டு வங்கியாக மாற்றுகிறார் மம்தா
மேற்கு வங்கத்தில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றும் நாள் 'வெகு தொலைவில் இல்லை!': ஊடுருவல்காரர்களை ஓட்டு வங்கியாக மாற்றுகிறார் மம்தா
UPDATED : பிப் 01, 2026 01:51 AM
ADDED : பிப் 01, 2026 12:41 AM

கொல்கட்டா: “மேற்கு வங்கத்தில் ஊடுருவல் என்பது நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஊடுருவல்காரர்களை ஓட்டு வங்கியாக மம்தா பானர்ஜி கருதுவதால், எல்லை வேலிகள் அமைப்பதற்கு மேற்கு வங்க அரசு நிலம் வழங்குவதில்லை. பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், 45 நாட்களுக்குள் நிலம் கையகப்படுத்தப்பட்டு எல்லை வேலிகள் அமைக்கும் பணி முடிக்கப்படும். வரும் சட்டசபை தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செய்து விட்டனர். பா.ஜ., ஆட்சியை கைப்பற்றுவதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆவேசமாகத் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் ஏப்., - மே மாதங்களில், தமிழகத்துடன் சேர்த்து தேர்தல் நடக்கிறது.
தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று, 15 ஆண்டுகளாக முதல்வர் அரியணையில் உள்ள திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, நான்காவது வெற்றியை எதிர்பார்த்துள்ளார்.
இந்த முறை எப்படியாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விட வேண்டும் என்பதில், எதிர்க்கட்சியான பா.ஜ., முனைப்புடன் உள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கி விட்டது.
வந்தே மாதரம்
இந்நிலையில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாரக்பூரில் நேற்று நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, நம் தேசப்பற்றை விளக்கும் வந்தே மாதரம் முழக்கத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்க்கிறார்.
இதன் மூலம், மாநிலத்தின் பாரம்பரியத்திற்கும், நாட்டின் கலாசாரம் மற்றும் அடையாளத்திற்கும் எதிராக அவர் செயல் படுகிறார். இதை, மேற்கு வங்க மக்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டர்.
வரும் சட்டசபை தேர்தலில், முதல்வர் மம்தா பானர் ஜியின் திரிணமுல் காங்கிரசை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சியை, 'டிபாசிட்' இழக்க செய்ய வேண்டும். மக்கள் விரோத ஆட்சியை நடத்தும் மம்தா பானர்ஜியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
வந்தே மாதரம் என்பது சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் கடைசி வார்த்தையாக இருந்தது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு, வந்தே மாதரம் பாடலின் 150- வது ஆண்டை, நாடு முழுதும் கொண்டாட முடிவு செய்துள்ளது.
இந்த முழக்கம், மேற்கு வங்கம் முதல் குஜராத் வரையும்; ஜம்மு - காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும் எதிரொலிக்கும்.
வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., 50 சதவீத ஓட்டுகளை பெறும். பீஹாரைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தையும் கைப்பற்றும். அதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை.
துணிச்சல்
பகவான் ராமருக்கு ராவணன் இடையூறு செய்தது போல, மம்தா பானர்ஜியும் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார். அவர் என்ன செய்தாலும் இந்த முறை பா.ஜ., ஆட்சியை கைப்பற்றுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
ஊடுருவல் என்பது நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மம்தா பானர்ஜி, ஊடுருவல்காரர்களை ஓட்டு வங்கியாக கருதுவதால் எல்லை வேலிகள் அமைப்பதற்கு மேற்கு வங்க அரசு நிலம் வழங்குவதில்லை.
பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், 45 நாட்களுக்குள் நிலம் கையகப்படுத்தப்பட்டு எல்லை வேலிகள் அமைக்கும் பணி முடிக்கப்படும்.
முதல்வர் மம்தா பானர்ஜிக்கு துணிச்சல் இருந்தால், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையால் விசாரணைக்கு உட் படுத்தப்பட்ட திரிணமுல் காங்., நிர்வாகிகளுக்கு, இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது.
'தாய், மண், மக்கள்' எனக்கூறி மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்தார். ஆனால், இன்று அவரது ஆட்சியில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. நிலங்கள் ஊடுருவல்காரர்கள் வசம் உள்ளன.
மேற்கு வங்கத்தை பாதுகாக்க, பா.ஜ., ஆட்சியை கைப்பற்றுவது அவசியம். ரவீந்திரநாத் தாகூர் மற்றும் பங்கிம் சந்திர சாட்டர்ஜி கனவு கண்ட வளமான மேற்கு வங்கத்தை உருவாக்குவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

