PUBLISHED ON : மே 22, 2025 12:00 AM

மே 22, 1926
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில், லெட்சுமணன் செட்டியார் - பிச்சையம்மை ஆச்சி தம்பதியின், இரண்டாவது மகனாக 1926ல், இதே நாளில் பிறந்தவர் ராமநாதன் என்ற தமிழ்வாணன்.
தேவகோட்டையிலும், திருச்சியிலும் பள்ளிப் படிப்பை முடித்தவர், திருச்சியில் இருந்து வெளியான, 'கிராம ஊழியன்' எனும் இதழில் மாதம், 30 ரூபாய் சம்பளத்தில் உதவி ஆசிரியராக சேர்ந்தார்.
பின், சென்னை வந்தவர், 'அணில்' என்ற குழந்தைகளுக்கான புதிய வார இதழில் ஆசிரியராக பொறுப்பேற்றார். அதில், 'துணிவே துணை' என்ற சொற்றொடரை அறிமுகப்படுத்தினார்.
குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை துவக்கிய, 'கல்கண்டு' இதழின் ஆசிரியராக, 30 ஆண்டுகள் பணியாற்றினார். இவரது கேள்வி - பதில் பகுதிக்கும், 'சங்கர்லால்' துப்பறியும் நாவல்களுக்கும், இன்றும் ஏராளமான வாசகர்கள் உள்ளனர்.
'மணிமேகலை' பிரசுரம் துவக்கி, ஏராளமான புத்தகங்களை வெளியிட்டார். பற்பொடி முதல் படத்தயாரிப்பு வரை பல்வேறு தொழில்களில் முத்திரை பதித்தவர், 1977 நவ., 10ல், தன் 51வது வயதில் காலமானார்.
இவரது பிறந்த தினம் இன்று!