PUBLISHED ON : டிச 28, 2025 03:36 AM

டிசம்பர் 28:
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், நவல் டாடா - சூனுா தம்பதிக்கு மகனாக, 1937ல் இதே நாளில் பிறந்தவர் ரத்தன் டாடா.
இவரது, 7 வயதிலேயே பெற்றோர் பிரிந்ததால், பாட்டி நவஜ்பாயிடம் வளர்ந்தார். தந்தையின் வற்புறுத்தலால், அமெரிக்காவில் மோட்டார் மெக்கானிக் பாடம் படித்தார். அதை பாதியில் கைவிட்டு, தான் விரும்பிய கட்டடக்கலை, வணிகப் பள்ளியில் உயர் மேலாண் மை, ஹார்வர்டு பல்கலையில் நிர்வாக படிப்புகளை முடித்து, ஐ.பி.எம்., நிறுவனத்தில் பணியாற்றினார்.
பின், தன் குடும்ப நிறுவனமான டாடா குழுமத்தில், அடிப்படை தொழிலாளியாக பணியில் சேர்ந்து, படிப்படியாக தலைவர் பதவிக்கு உயர்ந்தார். சர்வதேச சந்தை வாய்ப்புகளை கணிப்பதில் வல்லவரான இவர், தகவல் தொழில்நுட்பம், இரும்பு, வேதிப்பொருள், வாகனங்கள், தேயிலை உற்பத்தி தொழில்கள் என, நிறுவனத்தை வளர்த்தார்.
தன் பணி ஓய்வுக்குப் பின், டாடா நிறுவனத்தின் தலைவராக தமிழரான நடராஜன் சந்திரசேகரனை நியமித்தார். 'நாஸ்காம்' உலக தலைமை விருது, 'பத்ம பூஷண், பத்ம விபூஷண்' உள்ளிட்ட, நாட்டின் உயரிய விருதுகளை பெற்ற இவர், தன் 86வது வயதில், 2024, அக்டோபர் 9ல் மறைந்தார்.
நடுத்தர மக்களின் கார் கனவை நனவாக்கி, 1 லட்சம் ரூபாய்க்கு, 'நானோ கார்' தயாரித்து விற்ற தொழிலதிபர் பிறந்த தினம் இன்று!

