PUBLISHED ON : ஏப் 02, 2026 04:05 AM

ஏப்ரல் 2: தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட ராமநாதராஜு - மணியம்மாள் தம்பதியின் மகளாக, மயிலாடுதுறையில், 1933ல் பிறந்தவர் எம்.சரோஜா.
எட்டாம் வகுப்பு வரை படித்த இவர், தன் அக்காவும், நடிகையுமான சந்தானலட்சுமியை பின்பற்றி, நடனம் கற்று, 'மயூரன் தியேட்டர்ஸ்' குழுவில் இணைந்து, நாடகங்களில் நடித்தார்.
பிரபல திரைப்பட இயக்குநர் கே.சுப்பிரமணியம், சர்வாதிகாரி படத்தில், எம்.ஜி.ஆரின் முறைப்பெண் கதாபாத்திரத்தில், இவரை நடிக்க வைத்தார். தெளிவான வசன உச்சரிப்பு, இயல்பான நடிப்பால் மக்களை ஈர்த்த இவர், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிப் படங்களில் நடித்தார்.
தமிழில், கல்யாணப்பரிசு, வணங்காமுடி, மருதநாட்டு வீரன், தேன் நிலவு, திருடாதே, தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட, 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
கே.ஏ.தங்கவேலுவுக்கு ஜோடியாக, 50க்கும் மேற்பட்ட படங்களில், நகைச்சுவை பாத்திரத்தில் நடித்த இவர், மதுரையில் நடந்த கல்யாணப்பரிசு திரைப்பட வெற்றி விழா முடிந்ததும், முருகன் கோவிலில் தங்கவேலுவையே திருமணம் செய்து, வாழ்க்கையிலும் ஜோடியானார்.
'கலைமாமணி' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தன் 79வது வயதில், 2012ல் இதே நாளில் மறைந்தார். இவரது நினைவு தினம் இன்று!

