PUBLISHED ON : ஜூலை 24, 2026 12:29 AM

ஜூலை 24, 1945
பிரபல தொழிலதிபர் முகமது ஹாஷிம் பிரேம்ஜியின் மகனாக, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், 1945ல், இதே நாளில் பிறந்தவர் அசிம் பிரேம்ஜி.
பாகிஸ்தான் பிரிவினையின்போது இவரது தந்தையை முகமது அலி ஜின்னா அங்கு அழைத்தும், செல்ல மறுத்து விட்டார்.
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலையில், மின் பொறியியலில் பட்டம் பெற்ற இவர், தன் 21வது வயதில் சமையல் எண்ணெய், சோப் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களை செய்தார். நாட்டின் கணினி தொழில்நுட்ப தேவையை அறிந்து, மென்பொருள் தயாரிப்புக்காக, 1977ல், 'விப்ரோ' நிறுவனத்தை தொடங்கி, அதை சர்வதேச நிறுவனமாக்கினார்.
கடந்த 2001ல், கிராமப்புற கல்வி மேம்பாட்டிற்காக, பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி, அறக்கட்டளை தொடங்கினார். பில் கேட்ஸ், வாரன் பபெட் தொடங்கிய, 'தி கிவிங் பிளெட்ஜ்' அமைப்பில் சேர்ந்து, தன் சொத்தின் பெரும் பகுதியை சமூக நலனுக்காக வழங்கினார். நாட்டின் உயரிய விருதுகளான, 'பத்ம பூஷண், பத்ம விபூஷண்' விருதுகள் பெற்றுள்ளார்.
சாதாரண விடுதியில் தங்குவது, எளிய கார், விமானத்தில், 'எக்கனாமிக்' வகுப்பு பயணம் என எளிமையாக வாழும், தகவல் தொழில்நுட்பத் துறை சக்கரவர்த்தியின், 81வது பிறந்த தினம் இன்று!
