PUBLISHED ON : செப் 24, 2011 12:00 AM

அரசு செலவில்...!காஞ்சிபுரத்தை அடுத்த வாரணவாசி ஊராட்சியில், இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நடந்தது.விழாவில், மதுராந்தகம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கணிதா சம்பத் பேசும்போது, 'அரசின் உதவிகளைப் பெறும் நீங்கள், உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்கவேண்டும்' என்றார்.
அதுபோல், காஞ்சிபுரத்தில், சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடந்தது.
விழாவில், அமைச்சர் சின்னய்யா பேசும்போது,'முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு தாயாக இருந்து, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். அவர் நன்றாக இருக்க வேண்டுமென, நீங்கள் ஆண்டவனை பிரார்த்திக்க வேண்டும். காஞ்சிபுரம் நகராட்சி தலைவர் பதவிக்கு, மைதிலி திருநாவுக்கரசுவை, வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா நிறுத்தி உள்ளார்' என்றார். உடனே, மைதிலி எழுந்து கைகூப்பி, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
இதைக் கண்ட பார்வையாளர் ஒருவர், 'அரசு விழா (செல)விலேயே தேர்தல் பிரசாரத்தை துவக்கிட்டாங்களே... பலே... கில்லாடி தான் போங்க...' எனக் கூறி சிரித்தார்.
அனுபவம் பேசுது...!அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா பொங்கலூரில் நடந்தது. ஊரக தொழில்துறை அமைச்சர் சண்முகவேலு பேசும்போது, 'முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், ரேஷன் கார்டு வாங்க, ஒவ்வொரு அலுவலகத்திலும் நான்கைந்து முறை மனு கொடுத்து, ஒவ்வொரு அதிகாரியிடமும், 200, 500 ரூபாய் லஞ்சம் கொடுத்து, ஆர்.ஐ., தாசில்தார், டாக்டர் என, ஒவ்வொருவரிடமும் நடையாய் நடந்து வாங்கியிருப்பீர்கள். அதற்கு, தற்போது விடிவு பிறந்துள்ளது; விமோசனம் கிடைத்துள்ளது' என்றார்.
இதைக் கேட்ட பார்வையாளர் ஒருவர், 'பட்டா, சிட்டா என்று ஆவணங்கள் வாங்க இவரும் நடையாய் நடந்து, அதிகாரிகளை சரிக்கட்டி வாங்கியிருப்பார் போலும். கரெக்டா சொல்றாரே... அனுபவம் பேசுது...' என, 'கமென்ட்' அடித்ததும், அருகில் இருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.