PUBLISHED ON : ஜூலை 22, 2024 12:00 AM

சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தி.மு.க.,வைச் சேர்ந்த மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது. கூட்டத்தில், ஐந்தாவது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் சொக்கலிங்கம், தன் வார்டில் செய்யப்பட வேண்டிய தார்ச் சாலை, தெரு விளக்கு, அடிபம்பு அமைத்தல் போன்ற பணிகள் குறித்து பேசிய போது, குறுக்கிட்ட மண்டல குழு தலைவர், உதவி கமிஷனர் நவேந்திரன் ஆகியோர், நிதி பற்றாக்குறை பற்றி விளக்கினர்.
இதை கேட்ட கவுன்சிலர், 'மண்டல உதவி கமிஷனர் ஐயாவுக்கு எவ்வளவு சம்பளம்...' என, 'காமெடி'யாக கேட்க, அவரும், 'எனக்கு மாதம், 1 லட்சம் ரூபாய் சம்பளம்...' என, பதிலளித்தார். உடனே, 'அரசு நிதி இல்லாட்டா, உங்கள் சொந்த நிதியிலாவது, அந்த பணிகளை செய்து கொடுங்க...' என, நையாண்டி செய்தார்.
இதை கேட்ட அதிகாரி ஒருவர், 'எங்க சம்பள பணத்தில் பணி செய்தாலும், இவங்க, 'கமிஷன்' வாங்காம விடுவாங்களா...' என, முணுமுணுக்க, மற்றவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.