PUBLISHED ON : செப் 17, 2024 12:00 AM

மதுரையில் நடந்த சைபர் செக்யூரிட்டி தகவல் தொழில்நுட்பம் குறித்த மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாமில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் பறிபோகும் ஆபத்து உள்ளதாக நிபுணர்கள் பேசினர்.
இதில், தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் தியாகராஜன் பேசுகையில், 'ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆபத்தானது. சமீபத்தில், கோவையில் ஒரு கல்வி நிறுவன விழாவிற்கு சென்ற போது, என்னை குறித்த பயோடேட்டாவை ஏ.ஐ., வாயிலாக சேகரித்ததை புரிந்து கொள்ள முடிந்தது.
'அதில், நான் வேலை செய்யாத இடத்தில் எல்லாம் வேலை செய்தது போலவும், நான் படிக்காத இடத்தில் எல்லாம் படித்தது போலவும் தானாக கனவு கண்டு, 'ஹாலுசினேஷன்' போல ஏ.ஐ., தகவல்களை திரட்டியுள்ளது' என்றார்.
இதைக் கேட்ட மாணவர் ஒருவர், 'ஏ.ஐ., கனவு கூட காணுமா...?' என வியக்க, சக மாணவர், 'நமக்கு போட்டியா வரும்போதே, அதையும் கத்துக்கும் போல...' என கூறி சிரித்தார்.

