PUBLISHED ON : ஜூன் 08, 2024 12:00 AM

பெரம்பலுார் கலெக்டர் கற்பகம் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஓட்டு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, பெரம்பலுார் தொகுதி வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது, 'ஓட்டு எண்ணிக்கை சரியாக காலை, 8:00 மணிக்கு துவங்கும். முதலில் தபால் ஓட்டு எண்ணப்படும். பின், 8:30 மணி முதல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். ஓட்டு எண்ணும் மையத்திற்குள் வரும் ஒவ்வொருவரும் போலீஸ் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவதால், 7:00 மணிக்கு முன்னதாக முகவர்கள் உரிய அடையாள அட்டையுடன் வர வேண்டும். அதற்கு பின் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஓட்டு எண்ணும் மையத்திற்குள் மொபைல் போன், ஐ பேடு, லேப்டாப் அனுமதிஇல்லை' என்றார்.
இதைக் கேட்ட சுயேச்சை வேட்பாளர் ஒருவர், 'நாம வாங்க போற நாலு ஓட்டுக்கு இவ்வளவு கண்டிஷனை தாண்டி அவசியம் அங்க போகணுமா... பேசாம வீட்ல, 'டிவி' பார்க்க வேண்டியது தான்...' என, அருகில் இருந்த சக சுயேச்சை ஒருவருடன் பேசியவாறு புறப்பட்டார்.