PUBLISHED ON : ஏப் 04, 2024 12:00 AM

ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து, சென்னை, வளசரவாக்கம் எஸ்.வி.எஸ்., நகர் பிரதான சாலையில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில், அமைச்சர் சுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு வந்த தொண்டர்களுக்கு சிறிய ஜூஸ் பாக்கெட், வடை, பாதுஷா, தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவரில் அடைத்து வழங்கினர்.
இது அறியாமல், வழக்கம் போல இதுபோன்ற கூட்டத்தில் வேர்க்கடலை, தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யும் இருவர், வியாபாரத்திற்காக அங்கு வந்தனர். அனைவரின் கையிலும் தண்ணீர் பாட்டில், ஸ்நாக்ஸ் இருப்பதை பார்த்து, ஏமாற்றம் அடைந்தனர்.
வியாபாரிகள் இருவரும், 'முன்பெல்லாம் இவங்க பிரியாணி மட்டும் போடுவாங்க... நாம ஸ்நாக்ஸ், தண்ணீர் விற்றோம்... தேர்தல் கமிஷனுக்கு பயந்து ஸ்நாக்ஸ், தண்ணீரோட இவங்க முடிச்சிக்கிட்டா, இனி நாம தான் பிரியாணி விற்கணும் போல...' என, முணுமுணுத்தவாறு நடந்தனர்.

