PUBLISHED ON : மார் 25, 2024 12:00 AM

கன்னியாகுமரியில் நடந்த, பா.ஜ., பொதுக்கூட்டத்தில் நடிகை ராதிகா பேசுகையில், 'முதன்முதலாக, பா.ஜ., மேடையில் பேசுவது பெருமையாக உள்ளது. நான், எம்.ஆர்.ராதா மகள்; நடிகை. இதுவரை, 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். தன்னம்பிக்கை அதிகமுள்ளவள். பா.ஜ.,வில் சேர்ந்ததால் சிறப்பாக செயல்படக்கூடிய சக்தி வருகிறது.
'ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால், நாட்டின் தலைவர் நன்றாக இருக்க வேண்டும். தமிழகத்தில், 40 தொகுதிகளிலும் தாமரை மலர வேண்டும். தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலையுடன் என் கணவர் சரத்குமாருக்கு தான் பழக்கம்; இப்போது தான் அவரிடம் பழக ஆரம்பித்துள்ளேன். அவர், பா.ஜ., கண்டெடுத்த, சிப்பிக்குள் முத்து. வரும், 2026 சட்டசபை தேர்தலை இலக்காக நிர்ணயித்து அனைவரும் பணியாற்ற வேண்டும்' என்றார்.
பா.ஜ., நிர்வாகி ஒருவர், 'நம்ம கட்சி மேடையின், கன்னி பேச்சிலேயே இப்படி, 'ஐஸ்' வைக்கிறாரே... இவர் சீக்கிரமா வளர்ந்துடுவார்...' என, முணுமுணுத்தபடி நடந்தார்.

