PUBLISHED ON : ஏப் 14, 2024 12:00 AM

தர்மபுரி லோக்சபா தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தர்மபுரி குமாரசாமிபேட்டையில் பிரசாரம் செய்தார். திறந்த வேனில் அவர் பேசத் துவங்கியது முதலே, அவரிடம் கொடுத்த, 'மைக்' மக்கர் செய்தது.
அங்கிருந்த நிர்வாகிகள், மைக்கை மாற்றி தந்தனர். அந்த மைக்கில் 10 நிமிடம் பேசியதும், மீண்டும் கோளாறானது. கடுப்பான சீமான், கட்சி நிர்வாகிகளைக் கடிந்து கொண்டார். மீண்டும் வேறு மைக் கேட்டார். வேறு மைக் இல்லை என நிர்வாகிகள் கூறியதால், கடுப்பான அவர், அதே மைக்கில் பேசி, 20 நிமிடத்தில் உரையை முடித்து புறப்பட்டார்.
பார்வையாளர் ஒருவர், 'இவங்க சின்னமே மைக் தான்... அதை வெறுமனே அட்டையில் வரைந்து காட்டுறதுக்கு பதிலா, நிஜ மைக்கை ரெண்டு, மூணு ஸ்பேர் வச்சிருந்தா, இவ்வளவு டென்ஷன் இல்லையே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

