PUBLISHED ON : ஜூலை 02, 2024 12:00 AM

திருப்பூர் மாநகராட்சி கூட்டம் துவங்கி, இரண்டு மணி நேரத்துக்கு மேலாகியும் தீர்மானங்களுக்கு வராமல், கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்னைகளை பேசிக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவர் பேசும் போதும், 'பொது பிரச்னைகளை பேசுங்கள்; வார்டு பிரச்னைகளை, மண்டல அளவிலான கூட்டத்தில் முன் வைத்து தீர்வு காணுங்கள்' என, தி.மு.க.,வை சேர்ந்த மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார்.
தொடர்ந்து, வார்டு பிரச்னைகளை சில கவுன்சிலர்கள் பேசியதால், வெறுத்துப் போன மேயர், 'வீதி, வீதியாக பிரச்னைகள் குறித்து பேசிக் கொண்டிருந்தால் விடிந்து விடும். இதையெல்லாம் மண்டல கூட்டத்தில் பேசுங்கள். நாங்கள் வேண்டுமானால் அங்கு வருகிறோம்' என்றார்.
கவுன்சிலர் ஒருவர், 'வீதி, வீதியா பிரச்னையை பேசினால் இவர் விடிந்து விடும் என்கிறார்... ஆனால், விடியல் தருவதாக ஆட்சிக்கு வந்தீங்களே... தந்துட்டீங்களான்னு மக்கள் கேட்குறாங்களே...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.