/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
வெற்றிலை குளிர்பானத்தில் மாதம் ரூ.40,000 லாபம்!
/
வெற்றிலை குளிர்பானத்தில் மாதம் ரூ.40,000 லாபம்!
PUBLISHED ON : டிச 18, 2025 03:07 AM

வெற்றிலையில் குளிர்பானம் தயாரித்து, வெற்றிகரமான தொழில் முனைவோராக மாறியிருக்கும், தேனி மாவட்டம், சுருளிப்பட்டியைச் சேர்ந்த ரேணுகா:
நான், ஏழாம் வகுப்பு வரை படித்துள்ளேன். கணவர் ஊர் ராமநாதபுரம். ஆனாலும், இருவரும் சுருளிப்பட்டியில் தான் இருக்கிறோம். ஆரம்பத்தில் கூலி வேலைக்கு சென்றேன்.
என் கணவரது அக்கா, குளிர்பானம் தயாரித்து, சிறிய உறைகளில் அடைத்து விற்பனை செய்து வந்தார். 'நாமும் குளிர்பான வியாபாரம் செய்யலாமே' என கணவர் கூற, அதற்கான உறைகள், இயந்திரங்கள் வாங்கினோம். 'மேகோ' என்ற பெயரில், ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் மற்றும் திராட்சை குளிர்பானங்களை ஒரு உறை, 5 ரூபாய் என விற்பனை செய்தோம்.
வியாபாரம் சூடுபிடிக்கவும், வங்கியில் கடன் வாங்கி தொழிலை விரிவுபடுத்தினோம். மாவட்டம் முழுதும், தலா, 5 ரூபாய் விலையில், குளிர்பான உறைகளை விற்பனைக்கு அனுப்பினோம்.
எங்கள் ஊரில் வெற்றிலை அதிகமாக விளையும். சாப்பிட்டவுடன் செரிமானத்திற்காக வெற்றிலை போடும் பழக்கம், தமிழகம் முழுதும் உள்ளது.
எனவே, 'வெற்றிலையில் குளிர்பானம் தயாரித்தால், இயற்கை பொருட்களில் தயாரித்ததாகவும் இருக்கும்; அதிகமாகவும் விற்பனை ஆகும்' என, வேளாண் அறிவியல் நிலையத்தில் யோசனை கூறினர்.
இதையடுத்து தினமும், ஒவ்வொரு ரக வெற்றிலையாக வாங்கி, அவற்றில் பல்வேறு சுவைகளில் குளிர்பானம் தயாரித்து, பலரிடம் கொடுத்து, 'சுவை எப்படி உள்ளது?' என கேட்டறிந்தோம். எல்லாரும், 'அருமையாக இருக்கிறது' என்றனர்.
திருமணம் உள்ளிட்ட பல நிகழ்வுகளில், வெற்றிலை குளிர்பான கடை போட்டோம். மிகவும் நன்றாக இருப்பதாக பலரும் ஊக்கப்படுத்தினர். ஆரம்பத்தில், உறைகளில் விற்பனை செய்தோம். 'வெளிநாட்டு குளிர்பானங்களே, 15 ரூபாய் எனும் போது, இந்த குளிர்பானத்திற்கு, 10 ரூபாயா...' என, கடைக்காரர்கள் கேள்வி எழுப்பினர்.
இதனால், பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து கொடுக்க துவங்கினோம். மீண்டும் வங்கியில் கடன் பெற்று, தேவையான இயந்திரங்களை வாங்கி, கோலி சோடா பாட்டில்களிலும் வெற்றிலை குளிர்பானம் விற்பனை செய்ய துவங்கினோம். 250 மி.லி., பாட்டில், 30 ரூபாய்க்கு கொடுக்கிறோம்.
வெற்றிலை குளிர்பான விற்பனையில், மாதம், 63,000 ரூபாய் வருமானம் வருகிறது; செலவு போக, 40,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது.
தேனி மட்டுமின்றி, கடலுார், சென்னை என, பல மாவட்டங்களிலும் எங்களின் வெற்றிலை குளிர்பானம் விற்பனை ஆகிறது. உணவகங்கள், திருமணங்களுக்கும் தனியாக வினியோகம் செய்து வருகிறோம். அசைவ உணவகங்களில் விற்பனை செய்வது குறித்து பேசி வருகிறோம்.

