PUBLISHED ON : மே 17, 2024 12:00 AM

கோவை மாவட்டம், துடியலுார் அருகே என்.ஜி.ஜி.ஓ., காலனி கேட் கிருஷ்ணா திருமண மண்டபத்தில், ஸ்ரீ ராதே கிருஷ்ணா சேவா கமிட்டி மற்றும் தமிழ்நாடு பிராமணர் சங்கம் இணைந்து ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவ மூன்று நாள் விழாவை நடத்தின.
விழாவில், 'காஞ்சியும் அயோத்தியும்' என்ற தலைப்பில் ஆன்மிக பேச்சாளர் நாகை முகுந்தன் பேசுகையில், 'ராதா கல்யாணம், ருக்மணி கல்யாணம், சீதா கல்யாணம், வள்ளி கல்யாணம், பார்வதி கல்யாணம் எல்லாவற்றிலும் பெண்களின் பெயரே முன்னணியில் உள்ளது. இதற்கு காரணம் பெண்கள் கருணைக்கடல் போன்றவர்கள் என்பது தான். அவர்களுக்கு ஏற்றத்தை தருவதற்காகவே இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து வருகின்றன' என்றார்.
முன் வரிசையில் அமர்ந்திருந்த பார்வையாளர் ஒருவர், 'இந்த சொற்பொழிவை அப்படியே உள்வாங்கி, நம் வீட்டு பெண்களை புகழ்ந்து தள்ளினால், இல்லறத்தில் பிரச்னையே வராது...' என, முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.

