PUBLISHED ON : பிப் 26, 2025 12:00 AM

துாத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மறு சீரமைப்பு பணிகளுக்கான ஆய்வு கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது. சிறப்பு விருந்தினராக நெல்லை முன்னாள் எம்.பி., ராமசுப்பு கலந்து கொண்டார்.அவர் பேசும்போது, 'காங்., கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தான், கட்சியை துாக்கி பிடிக்க முடியும்.
'காங்., இல்லாமல் கூட்டணி கட்சிகள் ஜெயிக்க முடியாது என்பதை எல்லாரும் மனதில் கொள்ள வேண்டும். நாம் கூட்டணியோடு ஓடிக் கொண்டிருப்பதால், நம்மை சிலர் கேள்வி கேட்கின்றனர். தனியாக நின்று வெற்றி பெற்றிருந்தால் கேள்வி கேட்க மாட்டார்கள். கட்சியின் அடிப்படைகளை சரி செய்து, அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்' என்றார்.
மூத்த நிர்வாகி ஒருவர், 'காங்., கூட்டணி இல்லாமல் யாரும் ஜெயிக்க முடியாதுன்னு சொல்றாரே... நம்ம கட்சி நிர்வாகிகளுக்குள்ளயே கூட்டணி இல்லையே... இதை யாரிடம் போய் சொல்றது...' என 'கமென்ட்' அடிக்க, சக நிர்வாகிகள் சிரித்தபடியே கிளம்பினர்.

