PUBLISHED ON : பிப் 27, 2025 12:00 AM

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஜல்லிக்கட்டு நடந்தது. மணப்பாறை தாசில்தார் செல்வம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்று, போட்டியை கண்காணித்தனர்.
இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அ.தி.மு.க., வின் திருச்சி தெற்கு மாவட்ட செயலர் குமார் பேசுகையில், தி.மு.க., ஆட்சியையும், முதல்வர் ஸ்டாலினையும் விமர்சித்தார். மேலும், 'அடுத்தது அ.தி.மு.க., ஆட்சி தான்; அடுத்த முதல்வர் பழனிசாமி தான்' என்றும் பேசினார்.
இதை எதிர்புற மேடையில் இருந்து கேட்ட தாசில்தார் செல்வம், ஜல்லிக்கட்டு மேடையில் அரசியல் பேசுவதை தடுத்து நிறுத்த, மைக்கில் பேச முயன்றார். ஆனால், அவரது மைக் வேலை செய்யவில்லை. பின் கையை ஆட்டி, எதிர் மேடையில் இருந்தவர்களை கூப்பிட்டார்; யாரும் கண்டுகொள்ளவில்லை. தாசில்தார் பல வழிகளில் முயற்சித்தும் பலனில்லை. அதற்குள் குமார் பேசியே முடித்து விட்டார்.
அ.தி.மு.க., தொண்டர் ஒருவர், 'பாவம் தாசில்தார்... எந்த தண்ணியில்லாத காட்டுக்கு துாக்கி அடிக்க போறாங்களோ...?' என, முணுமுணுத்தபடியே நடந்தார்.

