PUBLISHED ON : மார் 05, 2025 12:00 AM

மதுரையில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய, அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, 'கருணாநிதி சிறந்த அரசியல்வாதி. அவரிடம் பாடம் கற்றவர் ஸ்டாலின். சிறந்த அரசியல்வாதி; சிறந்த ஆட்சியை கொடுப்பார் என நினைத்தோம். ஆனால் மிகக் கேவலமான நிலைக்கு, சட்டம் - ஒழுங்கு சென்றுவிட்டது. தி.மு.க., ஆட்சியை மாற்ற வேண்டும்.
'நம் வைகைப்புயல் வடிவேலு, 2016 தேர்தலில் தி.மு.க.,விற்கு மேடை மேடையாக ஏறி, 'கருணாநிதி ஆட்சி தொடரும்' என்றார்; ஆனால், தேறவில்லை. தற்போது மீண்டும் மேடை ஏறி, 'ஸ்டாலின் ஆட்சி தொடரும்' எனக் கூறுகிறார். என்ன நடக்கப் போகுது, பார்ப்போம்' என்றார்.
'அரசியலில் காமெடி செய்யும் இவர் சொல்வதை நம்புவதா, இல்லை சினிமாவில் காமெடி செய்யும் வடிவேலு சொல்வதை நம்புவதா என குழப்பமா இருக்கே...' என, கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர், 'உற்சாகத்தில்' கத்தினார்.