PUBLISHED ON : டிச 04, 2025 12:12 AM

பொது நுாலக இயக்ககம், திருப்பூர் மாவட்ட மைய நுாலக வாசகர் வட்டம் சார்பில், திருப்பூரில் தேசிய நுாலக வார விழா நடந்தது.
இதில் பங்கேற்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ்குமார் பேசுகையில், 'பள்ளியில் நான் படிக்கும் போது, பேச்சு போட்டிக்கு தயாராக பள்ளியில் நுாலகம் இருக்காது; ஒரு பீரோ நிறைய புத்தகங்கள் இருக்கும்.
'பேச்சு போட்டிக்கு செல்லும் மாணவருக்கு மட்டும், பீரோவை திறந்து புத்தகம் எடுத்து தந்து படிக்க சொல்வர். தற்போது, எல்லா இடங்களிலும் புத்தகங்களும், படிக்க வாய்ப்பும் கிடைக்கிறது. ஆனாலும், சமூக வலைதளங்களை பயன்படுத்தும் நேரத்தை விட குறைவான நேரமே புத்தகம் படிக்கிறோம்.
'தீபாவளி போன்ற பண்டிகைக்கு குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கும் போது, நல்ல எழுத்தாளர் ஒருவரின் புத்தகத்தையும் வாங்கி கொடுத்து படிக்க சொல்லுங்கள்; மாற்றம் வரட்டும்' என்றார்.
முன்வரிசையில் இருந்த ஒருவர், 'இது நல்ல யோசனை தான்; வீட்டுக்கு ஒரு புத்தக பீரோ அவசியம் இருக்கணும்...' எனக் கூற, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.

