PUBLISHED ON : ஜூன் 04, 2025 12:00 AM

தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் இறையன்பு எழுதிய, 'ஓராண்டு உரைகள்' என்ற நுால் வெளியீட்டு விழா, கரூரில் நடந்தது. இறையன்பு, கரூர் கலெக்டர் தங்கவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இறுதியாக, இறையன்பு பேசிக் கொண்டிருந்தபோது, அவரிடம் ஒருவர் துண்டுச்சீட்டு கொடுத்தார். அதில், 'கரூர் மாவட்டத்தில் உள்ள நுாலகங்களுக்கு வழங்குவதற்காக, 25 புத்தகங்களை கலெக்டர் தங்கவேல் பெற்றுக்கொள்கிறார்' என, எழுதப்பட்டிருந்தது.
அதை மைக்கில் வாசித்த இறையன்பு, கலெக்டருக்கு நன்றி சொல்லிவிட்டு, 'என் வாழ்நாளில் நான் துண்டுச்சீட்டு கொடுத்ததும் இல்லை; வாங்கியதும் இல்லை. எனக்கே, கரூரில் துண்டுச்சீட்டு வழங்கி விட்டீர்களே...' என்றார் சிரித்தபடி.
பார்வையாளர் ஒருவர், 'பெரும்பாலும், 'பேச்சை சீக்கிரம் முடிங்க'ன்னுதான் துண்டுச்சீட்டு தருவாங்க... இவர், 'புத்தகத்தை வாங்குறோம்'னு தானே துண்டுச்சீட்டு குடுத்திருக்காங்க...' எனக்கூற, அருகில் இருந்தவர்கள் சிரித்தனர்.