PUBLISHED ON : ஜன 07, 2024 12:00 AM

'அணை கட்டி தடுக்க முடியுமா?'
சென்னை, செங்குன்றம் அடுத்த பாடியநல்லுாரில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினரின் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பன்னீர்செல்வம் தாமதமாக வந்தார்.அப்போது, அரங்கில் கூட்டம் பாதியாக குறைந்திருந்தது. சிலர், இரவு உணவு சாப்பிடவும், வீட்டிற்கும் நடையை கட்டினர். இருக்கைகள் காலியாக இருந்ததால், கட்சி நிர்வாகிகள், பக்கவாட்டிலும், அரங்கிற்கு வெளியிலும் நின்றிருந்தவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து இருக்கைகளில் அமர வைத்தனர்.
கட்சி நிர்வாகி ஒருவர், 'நம்ம அணிக்கு ஆட்களை திரட்டுறதுக்குள்ள நாக்கு தள்ளிடுது... இதுல இவர் லேட்டா வந்தா எப்படி...? அழைத்து வந்தவர்களை அணை கட்டி தடுக்க முடியுமா...?' என, புலம்பியவாறு காலியாக இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தார்.
'தமிழ் வர மாட்டேங்குதே!'
தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு, மத்திய அரசின் சார்பில், மதுரையில் நடந்த சித்த மருத்துவ கருத்தரங்கில், மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் முஞ்ஜ்பரா மகேந்திரபாய் கலுபை சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விழா மலரை வெளியிட்டார். அமைச்சர் பேச துவங்கியது போது, 'ஏழாவது சித்த மருத்துவ திருநாள் வாழ்த்துகள்... பிற்பகல் வாழ்த்துகள்... என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்...' என, கொஞ்சும் தமிழில் பேசினார்.
இதைக் கேட்டு மேடையில் கைத்தட்டல் அதிர்ந்தது. தொடர்ந்து பேசிய அமைச்சர், 'தமிழில் பேச வேண்டும் என நினைத்தேன். ஒரு மணி நேரத்திற்கு முன்பாக தான் இந்த வார்த்தைகளை கற்றுக் கொண்டேன்...' என்றார்.சித்த மருத்துவர் ஒருவர், 'தமிழ் பாரம்பரியசித்த மருத்துவ கருத்தரங்கில் பங்கேற்பதால், தனக்கு தெரியாத மொழியை அமைச்சர் ஒரு மணி நேரத்தில் கற்றுக் கொண்டு பேசி விட்டார்... தமிழகத்தில் பிறந்த பலருக்கும் தற்போது வாயில் தமிழே வர மாட்டேங்குதே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.
'சுவாமிக்கு ரொம்ப குசும்பு!'
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் மற்றும் அட்சதையை மக்களுக்கு வினியோகிக்கும் வகையில், பொறுப்பாளர்களுக்கு அவற்றை வழங்கும் விழா மதுரையில் நடந்தது. இதில், மதுரை ஆதீனம் பேசுகையில், 'ராமன் தனக்கு கிடைத்த ராஜ பதவியை துாக்கி எறிந்து கானகத்திற்கு சென்றார். அவர் வனத்திற்கு செல்கையில் அவரது முகம், 'அன்றலர்ந்த தாமரை போல இருந்தது' என, கம்பர் கூறுகிறார்.இப்போது அப்படி கூறியிருந்தால் கம்பரை, 'தாமரை' கட்சிக்காரர் என்று கூறிவிடுவர். 'அப்போதே தாமரை தான் மலர வேண்டும் என சொல்லி விட்டார். நான் சொல்லலப்பா... நான் சொல்லி இருந்தால் வழக்கு போட்டிருப்பாங்க... கம்பரும், வேறெந்த பூவையும் சொல்லாமல், தாமரையை தான் சொல்லியுள்ளார்...' என்றார்.
இதைக் கேட்ட பார்வையாளர் ஒருவர், 'சுவாமிக்கு ரொம்ப தான் குசும்பு... ஆன்மிகத்துல அரசியலை மிக்ஸ் பண்ணி அடிச்சி விடுறார் பாருங்க...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து சிரித்தனர்.