PUBLISHED ON : ஜன 01, 2026 07:04 PM

புதிய ஆண்டின் முதல் நாளை இறையருளுடன் தொடங்க வேண்டும் என்ற வேட்கையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் இன்று அதிகாலை முதலே பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. 'கோவிந்தா... முருகா...' என்ற பக்தி முழக்கங்களுக்கு இடையே, வண்ணமயமான அலங்காரங்களுடன் இறைவனைத் தரிசித்த மக்கள், நம்பிக்கையுடன் தங்கள் புத்தாண்டுப் பயணத்தைத் தொடங்கினர்.



அதேபோல், சென்னை ராயபுரத்தில் உள்ள ஸ்ரீ வர்ண விநாயகர், புத்தாண்டு விருந்தாக 21 வகையான பழங்களால் அலங்கரிக்கப்பட்டு 'கனி விநாயகராக' காட்சியளித்தார். இந்த அரிய அலங்காரத்தைத் தரிசிக்க மக்கள் போட்டி போட்டுக்கொண்டு திரண்டனர்.
இப்படி தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் உள்ள ஆலயங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தன. ஆடம்பரமான அலங்காரங்கள் ஒருபுறம் இருந்தாலும், இறைவனின் சன்னதியில் மக்கள் சிந்திய பக்தி கண்ணீரும், அவர்களின் நம்பிக்கையும் 2026-ஆம் ஆண்டு அனைவருக்கும் ஒரு சுபிட்சமான ஆண்டாக அமையும் என்பதைப் பறைசாற்றியது.
-எல்.முருகராஜ்.

