PUBLISHED ON : ஜன 25, 2024 12:00 AM

மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியை சேர்ந்த துணைமேயர் நாகராஜன் அலுவலகம் மீது, ரவுடிகள் இருவர் தாக்குதல் நடத்தினர். இதன் பின்னணியில் தி.மு.க. வட்ட செயலர் கண்ணன் துாண்டுதல் இருப்பதாக, போலீசில் துணைமேயர் புகார் அளித்தார்.
அக்கட்சியினரும், எம்.பி. வெங்கடேசன் தலைமையில், தி.மு.க. வட்ட செயலரை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.
ஆறுதல் கூற வந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பாலகிருஷ்ணன், லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதை மனதில் வைத்து, 'தி.மு.க.வுக்கும், தாக்குதலுக்கும் சம்பந்தமில்லை; இது, தேர்தல் கூட்டணியை பாதிக்காது' என்று கூறினார்.
இதைக் கேட்டு, 'ஷாக்' ஆன அவரது கட்சி தொண்டர் ஒருவர், 'இவரோட கருத்து, கவுண்டமணி காமெடி மாதிரி, ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும்... பூசாத மாதிரியும் இருக்கணும் என்பது போல அல்லவா இருக்கு...' என, முணுமுணுத்தபடியே நகர்ந்தார்.