PUBLISHED ON : நவ 16, 2026 12:00 AM

பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன், சமீபத்தில் திருத்தணி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின் அவர் அளித்த பேட்டியில், ‘கடந்த 2020ம் ஆண்டு கந்த சஷ்டி துவக்கத்தின் போது, பா.ஜ., தமிழக தலைவராக இருந்த நான், திருத்தணியில் வெற்றி வேல் யாத்திரையை தொடங்கி, திருச்செந்துார் முருகன் கோவிலில் முடித்தேன். ஆறு ஆண்டுகளுக்கு பின், தற்போது திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துள்ளேன்.
‘பிரதமர் மோடியின் கடின உழைப்பு, கனவு, லட்சியம் அனைத்தும், வரும் 2047ம் ஆண்டிற்குள் நிறைவேறி, வளர்ச்சி அடைந்த பாரதம் உருவாக வேண்டும் என முருகனிடம் பிரார்த்தனை செய்தேன்’ என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘மத்திய அமைச்சர், ராஜ்யசபா எம்.பி., பதவிகள் எல்லாம் இவரிடம் இருந்து பறிபோயிட்டதால, மறுபடியும் மாநிலத் தலைவர் பதவிக்கு கடவுள் முருகனிடம் மனு போட்டிருப்பாரோ?’ என, ‘கமென்ட்’ அடிக்க, சக நிருபர், ‘இருந்தாலும் இருக்கும்’ என்றபடியே கிளம்பினார்.
