PUBLISHED ON : அக் 18, 2026 12:00 AM

மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், நாகை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜவாஹிருல்லா சமீபத்தில் திருச்சி வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, த.வெ.க., அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தேர்தல் சூழலில் பல்வேறு கட்சிகள் கூட்டணி மாறினாலும், மனிதநேய மக்கள் கட்சி தொடர்ந்து தி.மு.க., கூட்டணியில் இருந்து வருகிறது.
‘தி.மு.க.,வின் கொள்கைகளுக்கும், பா.ஜ.,வின் கொள்கைகளுக்கும் இடையே ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. கொள்கை அடிப்படையில் தி.மு.க.,வும், பா.ஜ.,வும் எதிரெதிர் நிலைப்பாட்டில் உள்ளன. இதனால், அவர்கள் கூட்டணி சேர வாய்ப்பில்லை’ என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘தி.மு.க.,வும், பா.ஜ.,வும் 1999 முதல் 2004 வரை கூட்டணியில் இருந்ததையும், வளமான மத்திய அமைச்சர் பதவிகளில் தி.மு.க.,வினர் இருந்ததையும் இவர் மறந்துட்டார் போல...’ என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்து சிரித்தபடியே கிளம்பினர்.
