PUBLISHED ON : அக் 17, 2026 12:00 AM

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் சமீபத்தில் நடந்தது.
கூட்டத்திற் கு தலைமை வகிக்க வேண்டிய கலெக்டர் வேறு பணியாக சென்று விட்டதால், டி.ஆர்.ஓ., புண்ணியகோடி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது, துறை சார்ந்த மனுக்களை பெற்றுக் கொள்ளும்படி அதிகாரிகளை அழைத்தார். ஆனால், அதிகாரிகள் யாரும் காதில் வாங்காமல், மொபைல் போனில், ‘ரீல்ஸ்’ பார்த்துக் கொண்டிருந்தனர்.
டி.ஆர்.ஓ., மீண்டும் அழைத்தும், பொருட்படுத்தாமல் அதிகாரிகள் போனை நோண்டியபடி இருந்தனர். இதனால் கோபமடைந்த டி.ஆர்.ஓ., ‘மொபைல் போன் பார்ப்பவர்கள் கூட்டத்தை விட்டு வெளியேறுங்கள்’ என கண்டிப்புடன் கூறினார். அதன் பின்னரே அதிகாரிகள், கூட்டத்தை கவனிக்கத் துவங்கினர்.
இதை பார்த்த ஒருவர், ‘இந்த மாதிரி கூட்டங்கள்ல கலந்துக்கிற அதிகாரிகளின் மொபைல் போன்களை வாசல்லயே வாங்கி வச்சிடணும்’ என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.
