PUBLISHED ON : நவ 27, 2026 12:00 AM

சென்னை மாநகராட்சியின் மணலி மண்டலக் குழு கூட்டம், தி.மு.க., மண்டலக் குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் சமீபத்தில் நடந்தது. இதில், உதவி கமிஷனர் அரவிந்தன், செயற்பொறியாளர் தேவேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய, 21வது வார்டு த.வெ.க., ஆதரவு கவுன்சிலர் ராஜேஷ் சேகர், ‘என் வார்டில், என்.எஸ்.கே., தெருவில் உள்ள அங்கன்வாடி மையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும்?’ என, கேள்வி எழுப்பினார்.
அதற்கு அதிகாரி ஒருவர், ‘அந்த அங்கன்வாடி மையம் இரு மாதங்களாக பயன்பாட்டில் உள்ளது’ என்றார். அதிர்ந்து போன ராஜேஷ் சேகர், ‘நான் தான் சார் அந்த வார்டு கவுன்சிலர்... எனக்கு தெரியாமல் எப்ப திறந்தீங்க?’ என கேள்வி எழுப்பினார்.
உடனே, மண்டலக் குழு தலைவர் ஆறுமுகம், ‘எப்ப திறந்தாங்கன்னு எனக்கும் தெரியாது’ என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘நடுராத்திரியில் அதிகாரிகளா திறந்துட்டாங்களோ?’ என, ‘கமென்ட்’ அடிக்க, சக நிருபர்கள் ஆமோதித்து சிரித்தனர்.
